ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது : நீதிமன்றம்!

தமிழகம்

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது மார்ச் 28ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் இதுவரை 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னை பெருங்குடி பெரியார் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மணிகண்டன் என்ற வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தனது மனைவி குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அதுபோன்று சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ரகுவரனும் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்நிறுவனத்திடம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விவரங்கள், போனஸ், சம்பாதித்த தொகை, வருமான வரி பிடித்தம் உள்ளிட்ட விவரங்களை வழங்கும் படி கடந்த 24ஆம் தேதி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளதால் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதில் எங்கள் தரப்புக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் அதுவரை விசாரணை என்ற பெயரில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரசு தரப்பு மார்ச் 28ஆம் தேதி பதிலளிக்க வேண்டும். அதுவரை இந்த நிறுவனம் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

பிரியா

செல்ஃபியால் பறிபோன இளைஞரின் உயிர்!

தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடி விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *