ஆதார் கார்டு கெடையாது… இன்ஸ்டாவில் தான் திட்டம்… அடிச்சதுல மூணு பங்கு! அதிரவைக்கும் கொள்ளையர்கள்!

Published On:

| By vanangamudi

தமிழகம் எல்லாம் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்த  நேரத்திலே… முக்கியமான மூன்று கொள்ளையர்களை தேட ஆரம்பித்து, பொங்கல் முடிந்ததும் பிடித்திருக்கிறது ஒரு போலீஸ் டீம். அவர்களிடம் வாக்குமூலம் பெற்றபோதுதான், போலீஸாரை அதிரவைக்கும் வகையிலான முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் குன்யாகூர் ஜாஹிப் தெருவில் அமைந்திருக்கிறது ரகுமான் என்பவரின் வீடு. அதை வீடு என்று சொல்வதை விட பங்களா என்று சொல்லலாம். முகப்பில் மிகப்பெரிய கேட்… அதையடுத்து பிரம்மாண்ட மரக் கதவுகள் என இருக்கிறது அந்த வீடு.

பிரபல தொழிலதிபர் பரிதா பாபுவின் தொழிற்சாலையில் பி.ஆர்.ஓ.வாக வேலை செய்கிறார் ரகுமான்.  அவரது மகன் பெங்களூருவில் படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 11ஆம் தேதி இரவு ரகுமானும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு தங்களது மகனை பார்ப்பதற்காக பெங்களூவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மறுநாள் 12 ஆம் தேதி காலை ரகுமானின் உறவுக்கார பையன், அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வாசலில் இருந்தே அதிர்ச்சியுடன் ரகுமானுக்கு போன் செய்துள்ளார்.

‘நம்ம வீட்டு மெயின் கேட் தெறந்து கெடக்கு. உள்ள போய் பார்த்தா மரக் கதவையும் உடைச்சிருக்காங்க” என்று தகவலைக்  கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ரகுமான் உடனடியாக ஆம்பூர்  நகர காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தன் வீட்டில் நடந்ததைச் சொல்லியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் ஆம்பூர் நகர காவல் நிலைய எஸ்.ஐ தீபன் அந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.   கொஞ்ச நேரத்தில் டி.எஸ்.பி. குமாரும் சென்றார். கை ரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் சகிதம் ரகுமான் வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்தார்கள் போலீஸார்.

வெளி கேட் உடைக்கப்பட்டு,  உள்ளே சென்று  பெரிய மரக் கதவில் இருந்த தொட்டிப் பூட்டும் லாவகமாக உடைக்கப்பட்டு மாடிக்கு சென்று 13 பவுன் நகைகளையும், கொஞ்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

வீட்டில் இருந்து கை ரேகைகளை சேகரித்துக் கொண்ட போலீஸார், அந்த ரேகைகளை ஏற்கனவே இருக்கும் அக்யூஸ்டுகளின் கை ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

ஒரு முறை ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவராகவோ குற்றவாளியாகவோ போலீஸ் ஸ்டேஷன் சென்றால், அங்கே அந்த  நபரின் கை ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்கள் சேமிக்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சேமிக்கப்படும் அடையாளங்கள், மாவட்ட மாநகர தலைமையகத்தில் தனியாக ஒரு லைப்ரரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனோடுதான் புதியவர்களின் கை ரேகை சேகரிக்கடும்போது ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

அந்த வகையில், ஆம்பூர் ரகுமான் வீட்டில் சேகரிக்கப்பட்ட இரண்டு கை ரேகைகளை பழைய பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர் போலீஸார். பழைய கிரிமினல்களின் கை வரிசையா, அல்லது இவர்கள் புதியவர்களா என்பதற்காக இந்த ஆய்வை நடத்தினர். அப்போதுதான் திருடிய இருவரில் ஒருவரின் கை ரேகைகள் ஏற்கனவே போலீஸாரிடம் இருப்பது தெரியவந்தது.

சப்வேயில் அப்துல்கலாம்

அவன் பெயர் அப்துல் கலாம்.  அவனுக்கு சென்னை கண்ணகி நகர் என்று குறிப்புகள் கூறின. உடனடியாக திருப்பத்தூர் எஸ்பியிடம் தகவல் தெரிவித்து, அவரது உத்தரவின் பேரில் எஸ்.ஐ. தீபன் தலைமையில் ஒரு டீம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது. சென்னை போலீஸாரிடம் இந்தத் தகவலை தெரிவித்து, உதவி கேட்டது திருப்பத்தூர் டீம்.

அதன் பின் அப்துல் கலாமைத் தேடிச் சென்றனர்.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அப்துல் கலாம், கடந்த பத்து ஆண்டுகளாகவே வீட்டுக்கு வருவதில்லை. அவரது தந்தை கறிக்கடை வைத்திருக்கிறார். அப்துல் கலாமின் போக்கு பிடிக்காமல் அவர் கண்டுகொள்வதே இல்லை. கலாமுக்கு ஆதார் கார்டு கூட எடுக்கப்படவில்லை.

வீட்டுக்கு செல்லாத அப்துல் கலாம், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், அதன் அருகே உள்ள சப்வேக்களில்தான் படுத்துக் கிடப்பான். பகலில் கொள்ளையடிக்கக் கிளம்பிவிடுவான்.

இந்த விவரங்களை சென்னை போலீஸ் மூலம் சேகரித்துக் கொண்ட ஆம்பூர் டீம், 18 ஆம் தேதி அதிகாலை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் சப்வேயில்  தூங்கிக் கொண்டிருந்த அப்துல் கலாமை தூக்கியது.

கால் இல்லாத குரங்குதாஸ்

அவனோடு சேர்ந்து ஆம்பூரில் கை வரிசை காட்டிய இன்னொரு திருடன் பற்றி அப்துல் கலாமிடம் போலீஸார் விசாரித்தனர். அதன் படி அந்த இரண்டாவது ஆளைத் தேடி செங்குன்றம் சென்றனர். அங்கே ஒரு ஆட்டோவுக்குள் இருந்த குரங்குதாஸை பிடித்தனர் போலீஸார்.  குரங்குதாஸை பார்த்ததும் போலீஸார் அதிர்ந்துவிட்டனர். காரணம், அவனுக்கு வலது காலில் முழங்காலுக்கு கீழ்ப் பகுதியே இல்லை. தாஸின் கை ரேகை அந்த வீட்டில் இல்லை. ஆனாலும் அவன் அப்துல் கலாமின் கூட்டாளி என்பதால் அவனை பிடித்தனர் போலீஸார். அடுத்து,  தினேஷ் என்பவனையும்  பிடித்தனர் போலீஸார்.

அவர்களிடம் விசாரித்தபோதுதான் ஆம்பூர் போலீஸ் அதிர்ந்து போகும் அளவுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ரவுடிகள் கொடுத்த புது ரூட்!

அப்துல் கலாம், தினேஷ், குரங்குதாஸ் மூவரும்  சென்னை புழல், வேலூர் சிறைகளில் இருக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின் இந்த மூவரும் சேர்ந்து ஒரே நெட்வொர்க்காக மாறினர்.

சிறையில் இருந்த சீனியர் ரவுடிகளிடம் இவர்கள் பழகும்போது அவர்கள் முக்கியமான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது,. ‘எல்லா திருடனுமே ஏண்டா சென்னையை நோக்கி ஓடுறீங்க. சென்னையில திருட்டு சம்பவம் நடந்தா போலீஸ்லாம் உடனுக்குடன் கண்டுபிடிச்சிடுவாங்க. ஆனா சென்னைக்கு வெளியே போனால், அவ்வளவு  முக்கியத்துவம் கொடுத்து தேட மாட்டாங்க. அதனால சென்னையை விட்டுட்டு பக்கத்து மாவட்டத்துக்கு போங்க. வேலூர் பக்கத்துல இருக்குற திருப்பத்தூர், ஆம்பூர்ல ஏகப்பட்ட பொருளும் பணமும் கிடைக்கும்’ என்பதுதான் அந்த சீனியர்களின் அட்வைஸ்.

சிறையில் கிடைத்த அட்வைஸை அடுத்து இந்த மூன்று பேர் டீம் முதலில் போன இடம்தான் ஆம்பூர்.

ஜனவரி 10 ஆம் தேதி சென்னையில் ஆவடி டேங்க் ஃபேக்டரி பகுதியில் ஒரு வீட்டை உடைத்து மூவாயிரம் ரூபாய் பணம், ஒரு செல்போனை எடுத்துக் கொண்ட இவர்கள், அடுத்து அங்கிருந்து ஆம்பூர் கிளம்பியிருக்கிறார்கள்.

சென்னை சுற்று வட்டாரத்தில் இவர்கள் எங்கு சென்றாலும் குரங்குதாஸ்தான் ஆட்டோ ஓட்டுவான். வலது காலில் பாதி இல்லை என்றால் கூட ஆட்டோ ஓட்டுவதில் கில்லி தாஸ். அவனுக்கு பூர்வீகம் வாணியம்பாடி என்பதால், அந்த பகுதிகளும் அத்துப்படி.

அம்மா, அப்பா இல்லாமல் சென்னைக்கு சிறுவயதிலேயே பிழைக்க வந்தவன் தான் தாஸ். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான். பிறகு அங்கே குரங்கு வித்தை காட்டும் சிலருடன் சேர்ந்து குரங்கு வித்தை செய்துவந்தான் தாஸ். அதனால்தான், வெறும் தாஸ் குரங்கு தாஸ் ஆக மாறினான்.  அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் பிளாட்பார்மில் தூங்கும் பயணிகளிடம் திருட ஆரம்பித்தான். தன்னைப் போல பிளாட் பார்மிலேயே இருந்த ராஜலட்சுமி என்ற பெண்ணோடு பழக ஆரம்பித்து அவரை திருமணமும் செய்துகொண்டான். ஒரு முறை ரயில்வே தண்டவாளத்தை தாண்டும்போது ரயிலில் அடிபட்டுத்தான் குரங்குதாஸின் வலது கால் துண்டானது.

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட குரங்கு தாஸ் ஆட்டோவை ஓட்ட, அவனோடு அப்துல் கலாம், தினேஷ் இருவரும் ஆட்டோவில் ஆம்பூர் புறப்பட்டுச் சென்றனர்.

11 ஆம் தேதி பகலில் திருப்பத்தூர் சென்றுவிட்டனர். திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் மது அருந்திவிட்டு மாலை நேரம் ஆம்பூரில் உலா வந்திருக்கிறார்கள். அதாவது எந்த வீட்டில் கை வைக்கலாம் என்பதை மாலை நேரம்தான் முடிவு செய்வார்கள். அப்போது வீட்டில் எல்லாரும் இருக்கும் நேரம். எந்தெந்த வீட்டில் லைட் எரிகிறது. எந்த வீட்டில் லைட் எரியவில்லை, பூட்டிக் கிடக்கிறது என்பதை மாலையிலேயே பார்த்து விடுவார்கள். அப்படித்தான் அன்று மாலை ஆம்பூரில் குன்யாகூர் ஜாஹிப் தெருவில் இருக்கும் ரகுமான் வீட்டை ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அந்த வீட்டை செலக்ட் செய்திருக்கிறார்கள்.

இதன் பின் நடந்தவற்றை கொள்ளையர்களே போலீஸாரிடம் வாக்குமூலமாக சொல்லியிருக்கின்றனர்.

அதிகபட்சம் 10 நிமிஷம் தான்!

“11 ஆம் தேதி சாயங்காலம் வீட்டை  செலக்ட் பண்ணிட்டோம். பாக்கும்போதே பங்களா டைப் வீடுனு தெரிஞ்சுது. அதனால மறுநாள் 12 ஆம் தேதி விடிகாலையில 3 மணிக்கு ஆட்டோவுல அந்த தெருவுக்கு போனோம்.

குரங்குதாஸ்தான் வண்டி ஓட்டினான். ரெண்டு மூணு வீடு முன்னாடியே வண்டிய நிறுத்திட்டான்.  நாங்க (அப்துல் கலாம், தினேஷ்) ரெண்டு பேரும் இறங்கி அந்த வீட்டு வாசலுக்கு போனோம்.

வெளி கேட்டை உடைச்சு உள்ள போனோம். உள்ள போனா பெரிய மரக் கதவு. தொட்டிப் பூட்டு போட்டிருந்துச்சு. நான் எந்த பூட்டா இருந்தாலும் கம்பி போட்டு அதிகபட்சம் பத்து நிமிசத்துல தொறந்துடுவேன். அதுபோலவே அந்த பூட்டையும்  தொறந்துட்டேன். வீட்ல கீழ ஒண்ணுமில்லை. முதல் மாடிக்கு போனோம். அங்கதான் லாக்கர் இருந்துச்சு. அதுல  நகையும் பணமும் இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துட்டோம். உடனே கீழ இறங்கி ஆட்டோவுல ஏறி சென்னைக்கு வந்துட்டோம்”  என்றிருக்கிறார்கள். 

அவர்கள் திருடியது 13 பவுன் நகையும், 30 ஆயிரம் ரூபாய் பணம் என போலீஸார் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்த மூனு பாகம்… ஷாக் ஆன போலீஸ்

போலீசில் மூவரும் கொடுத்த வாக்குமூலத்தில்,

 “12 ஆம் தேதி காலையில ஆம்பூர்லேர்ந்து கெளம்பி சென்னைக்கு வந்துட்டோம். பொங்கலுக்கு சரக்கடிச்சுக் கொண்டாடினோம். சென்னைக்கு வெளிய திருடினா போலீஸ் பிடிக்காதுனு நெனைச்சோம். ஏன்னா… நாங்க செல்போனே யூஸ் பண்றதில்லை. ஆனா செல்போன் வச்சிருக்கோம். அதுல இன்ஸ்டா மூலமாதான் பேசிப்போம். இடம் முடிவானவுடனே செல்போனையெல்லாம் தூக்கிப் போட்டுருவோம்.

திருடினதை மூணு பாகமா பங்கு வச்சுப்போம். ஒரு பங்கு எங்க மூணுபேருக்கும், இன்னொரு பங்கு போலீஸுக்கு, இன்னொரு பங்கு வக்கீல்களுக்கு” என்று அவர்கள் சொன்னதும் விசாரணைக் குழுவினர் அதிர்ந்துவிட்டனர்.

அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள், அந்த மூவரும்.

“ஆமா… நாங்க திருடுற பொருள்ல மூணுல ஒரு பங்குதான் எங்களுக்கு. மீதி ரெண்டு பங்கு போலீஸுக்கும், வக்கீல்களுக்கும்தான். வேப்பேரி, மாங்காடு, சிட்ல பாக்கம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பூக்கடைனு எங்க மேல  50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கு. ஆனா ஒரு வழக்குல கூட எங்களுக்கு வாரன்ட் விழாது. ஜெயிலுக்கு போனா எங்களுக்கு உடனே பெயில் கிடைச்சிடும். ஏன்னா… ஒவ்வொரு ஹியரிங்லயும் ஆஜர் ஆயிடுவோம். அப்படி முடியலைன்னா வக்கீல்கிட்ட சொல்லி காரணத்தை ஜட்ஜ்கிட்ட சொல்லிடுவோம். இதனால எங்கள் மூணு பேர் மேல இதுவரைக்கும் வாரன்ட்ட்டே இல்லை. வாரன்ட் இருந்தாதா போலீஸ் எங்க மேல கண் வைச்சுக்கிட்டே இருக்கும். வாரன்ட் இல்லைன்னா போலீஸ் எங்க பக்கமே வராது. அதனால நாங்க  ஃப்ரியா எங்க வேலைய பாத்துக்கிட்டிருப்போம்” என்றிருக்கிறார்கள்.

அந்த மூணாவது பங்கு போலீஸுக்கு சொன்னியே… அது எப்படி கொடுப்பே? என்று விசாரணை டீம் கேட்டதும் கொஞ்சம் தயங்கியிருக்கிறார்கள். முறைப்படி கேட்டதும் அந்த உண்மையையும் உடைத்திருக்கிறார்கள்.

“சென்னை சிட்டி ஸ்பெஷல் டீம்ல இருக்கிற போலீசை எல்லாம் எங்களுக்குத் தெரியும். எங்களையும் அவங்களுக்கு நல்லா தெரியும்.  ஏதாச்சும் முக்கிய கேஸ்ல துப்பு கெடைக்கலன்னா எங்கக்கிட்டதான் கேட்பாங்க. நாங்க பண்ணலைன்னா வேற யார் பண்ணியிருப்பாங்கனு க்ளூ ஏதாச்சும் கொடுப்போம். இன்னும் சில நேரங்கள்ல நாங்க செய்யாத திருட்டுக்கு கூட எங்க மேல கேஸ் போடணும், சீக்கிரம் முடிக்கணும்னு சொல்லுவாங்க. அப்போ நாங்க கேஸ் வாங்கிப்போம்.

சென்னை க்ரைம் ஸ்பெஷல் டீம்ல இருக்குற ஒவ்வொரு பெயரா சொல்லி அவங்க செல்போன் நம்பரையும் சொல்றேன். வேணும்னா செக் பண்ணிக்கங்க” என்று குரங்குதாஸ் சொல்ல… அதிர்ச்சியின் உச்சிக்கே போய்விட்டார்கள் விசாரணை டீம்.

இந்த அதிர்ச்சியோடே குரங்குதாஸ் (30) அப்துல் கலாம் (26), தினேஷ்  (23) ஆகிய  மூவரையும் ஜனவரி 18 ஆம் தேதி ஆம்பூர் ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…  வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel