நெய்வேலி என்.எல்.சி. விவகாரத்தில் களத்தில் இறங்கிப் போராடவும் தயார் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனம் இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிக்காக பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி கத்தாழை ஊராட்சி கரிவெட்டி கிராமத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிறுவனம் களமிறங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு நிலத்தை அளவீடு செய்ய முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், ”கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
என்எல்சிக்காக அரசு கையகப்படுத்தத் துடிக்கும் நிலங்கள் வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை.
நிலங்களை வழங்க முடியாது என்ற மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் உணர வேண்டும். மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது.
சிங்கூரில் மிரட்டியும், நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பயனற்று போயின; இறுதியில் மக்கள் சக்திக்கு அதிகாரம் பணிந்தது; பறிக்கப்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கே மீண்டும் கிடைத்தன என்பது மறக்க முடியாத, மறக்கக் கூடாத வரலாறு.
கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களையும், உரிமைகளையும் காக்க பாமக மட்டுமே போராடுகிறது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது.
தேவைப்பட்டால் எத்தனை மாதம் வேண்டுமானாலும் களத்தில் முகாமிட்டு, போராட்டத்தை தலைமையேற்று நடத்த தயாராக இருக்கிறேன்.
கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்.எல்.சிக்கு துணை போகக்கூடாது; நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது.
மக்களின் பக்கம் நின்று, கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ?
திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்