என்.எல்.சி சேதப்படுத்திய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களை 2007 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.
எனினும் இந்த நிலத்தில் விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் என். எல். சி நிறுவனம் விளை பயிர்களை சேதப்படுத்தி கால்வாய் அமைத்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயி முருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மற்ற பகுதிகளில் உள்ள பயிர்களை என். எல். சி சேதப்படுத்தக் கூடாது. விவசாயிகளும் செப்டம்பர் 15 க்கு பிறகு அந்த நிலத்தில் பயிரிடக்கூடாது” என்று உத்தரவிட்டது.
இழப்பீடு தொடர்பாக என். எல். சி நிறுவனமும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு எக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க தயாராக இருக்கிறோம்” என்று என். எல் சி தரப்பு தெரிவித்தது.
அப்போது விவசாயிகள் சார்பில் பா ம க வழக்கறிஞர் பாலு ஆஜராகி, “ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தால் விவசாயிகளுக்கு ரூ.80 ஆயிரம் கிடைக்கும்.
ஆனால் என். எல். சி வழங்குவதாக சொல்லும் ரூ.30,000 என்பது மிக மிக குறைவானது. எனவே ஏக்கருக்கு ரூ.80,000 வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், “இந்த விவகாரத்தை பொறுத்தவரை விவசாயிகள் தரப்பிலும் தவறு இருக்கிறது.
என். எல். சி தரப்பிலும் தவறு இருக்கிறது. அந்த நிலத்தில் பயிரிடக்கூடாது என்று ஏற்கனவே சொன்ன பிறகும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
அதுபோல என். எல். சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்திய பின்னர் அதை பாதுகாக்க தவறிவிட்டது. இரண்டு தரப்பிலும் தவறு உள்ளதால் 50 – 50 என்ற அடிப்படையில் என். எல். சி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதன்படி ஏக்கருக்கு ரூ.40,000 ஆயிரம் இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்கவிட வேண்டும்” என்று என். எல். சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பிரியா
டெண்டர் முறைகேடு : வழக்கை ரத்து செய்ய மறுப்பு!
திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!