என்.எல்.சி-க்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 28 பாமக கட்சியினருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
விளைநிலங்களை அழித்து சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்காக கால்வாய் அமைக்கும் பணிகளை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கதிர்விட்டு அறுவடைக்கு தயாராகி வந்த நெற்பயிர்களை அழித்து 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் மூலம் என்.எல்.சி கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் நேற்று காலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கலவரமான போராட்டம்
இந்த முற்றுகை போராட்டத்தில் என்.எல்.சி, மத்திய, மாநில அரசுக்கு எதிராக பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
தொடர்ந்து என்.எல்.சியை முற்றுகையிடுவதற்காக அன்புமணி தலைமையிலான பாமகவினர் முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.
கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இதனிடையே காவல்துறையினர் அன்புமணி ராமதாஸை கைது செய்ததால் பாமகவினர் போராட்டம் கலவரமாக மாறியது.
காவல்துறை வாகனங்கள் மீது கற்களை தூக்கி எறிந்து பாமகவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.
15 நாள் நீதிமன்ற காவல்
இந்நிலையில் நெய்வேலி கலவரத்தில் ஈடுபட்ட 28பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட 28பேருக்கும் 15நாள் நீதிமன்ற காவல் வழங்கி நெய்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28பேரில் 2பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தின் போது எடுத்த வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து மேலும் சிலரை கைது செய்யவும் காவல்துறை முடிவெடுத்துள்ளது.
பேருந்துகள் இயக்கம்
இதனிடையே நேற்று இரவு மர்ம நபர்கள் 5 அரசு பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் புறநகர் மற்றும் உள்ளூர் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
பணிகளை தொடங்கிய என்.எல்.சி
நேற்று பாமக முற்றுகை போராட்டம் அறிவித்ததையடுத்து 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக ஆர்ச் கேட் பகுதிக்கு சென்றனர்.
இதனால் என்.எல்.சி கால்வாய் அமைக்கும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட போலீஸ் அதிகாரிகள் இல்லாததால் தற்காலிகமாக கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் அமைக்கும் பணிகளை என்.எல்.சி தொடங்கியுள்ளது.
மோனிஷா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது!