நித்யானந்தாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கைலாசாவில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால்,
சிகிச்சை அளிக்க வேண்டி கைலாசா வெளியுறவுத்துறை அமைச்சர் நித்யபிரேமாத்ம ஆனந்த சாமி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூர் பிடதி ஆசிரமத்தை நடத்தி வந்த நித்யானந்தா, 2010ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பாலியல் புகாரில் நித்யானந்தாவை ஆஜராகுமாறு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி ராம்நகர் கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவில்லை.
நித்யானந்தா சீடர்கள் இருவர் 2018-ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார்.
இந்தநிலையில் நித்தியானந்தா கைலாசா என்ற ஒரு தனி தீவில் தாம் இருப்பதாக அடிக்கடி வீடியோ வெளியிட்டு வந்தார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, நித்யானந்தா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கைலாசாவில் இருந்து தகவல் வந்தது.
அவர் சமாதி மனநிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடல் நலக் குறைவில் இருந்து மீண்டு வந்து சத்சங்கம் நடத்தி வந்த நித்திக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக இலங்கை அரசை நாடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கைலாசா வெளியுறவுத் துறை அமைச்சர் என சொல்லப்படும், நித்யபிரேமாத்ம ஆனந்த சாமி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “இந்து மதத்தின் உயர்ந்த தலைவர் நித்யானந்தா சுவாமிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. தற்போது, கைலாசாவில் உள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதிகள் அந்தளவுக்கு இல்லை.
அவர் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது. நித்யானந்தாவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு இலங்கையில் உடனடியாக தஞ்சமடைய அனுமதி வழங்கி மருத்துவ சிகிச்சைகளுக்கும் அனுமதியுங்கள்.
கைலாசாவிலிருந்து அவரை விமான ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்து மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யுங்கள்.
நாங்கள் நித்யானந்தாவுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ கருவிகள் வாங்க தயாராக உள்ளோம்.
அவரது மருத்துவ சிகிச்சைக் கட்டணம் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நித்யானந்தாவிற்க்கு இலங்கையில் திரும்பபெற முடியாத தஞ்சம் வழங்கினால், அவர் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.
செல்வம்