கனமழை காரணமாக தேனி, கோவை உட்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் கனமழையால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை!
கனமழையினை தொடர்ந்து நேற்று நெல்லை, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழையும், நாளை நீலகிரி, கோவையில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையிலும் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால், கூலங்கள் ஆறு, வாழைதோட்ட ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி, கோவையில் விடுமுறை!
கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில், வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை நிலவரம்!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டை, பல்லாவரம், வேளச்சேரி, சேப்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்த ஆண்டில் இரு பெரிய மாநாடு: மு.க.ஸ்டாலின் திட்டம்!