வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ்(34) கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காளிதாஸும் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காளிதாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
வயநாடு நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ளதால் கூடலூர், பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்த பலர் தினமும் பணி நிமித்தமாக வயநாடு சென்று வருகின்றனர்.
அந்தவகையில் வயநாடு சென்று உறவினர் வீட்டில் தங்கியிருந்த காளிதாஸுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது நீலகிரி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் காளிதாஸ் உடலை நீலகிரி கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யுபிஏ ஆட்சியில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னீர்களா?: நிர்மலா சீதாராமன் கேள்வி!
காஞ்சிபுரத்தில் நெல்லை ஃபார்முலா…மேயர் ராஜினாமா?
வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி… ரூ.5 கோடி நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்
போதைப்பொருள் கடத்தல் : திமுக நிர்வாகி நீக்கம்!