24 மணி நேரத்தில் 32 செ.மீ. மழை: எங்கே தெரியுமா?

தமிழகம்

தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்துக்கு மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் நீர் நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டி வருவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படுள்ளது.

அவலாஞ்சியில் அதிக மழை பதிவு

கடந்த மூன்று நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்டு 6) தெரிவித்துள்ளது. மேல்பவானி 20 செ.மீ., பந்தலூர் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. உதகை, மேல் கூடலூர் ஆகிய பகுதிகளில் 10 செ.மீ.-க்கு மேலாக மழை பதிவாகியுள்ளது.

சின்ன கல்லாறு 7 செ.மீ., எமரால்டு 6 செ.மீ. மழையும், சோலையாறு, சின்கோனா, வால்பாறை, தேவாலா ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கூடலூர் பஜார், நடுவட்டத்தில் தலா 3 செ.மீ மழையும், குந்தா பாலம், பள்ளிப்பட்டு, கிளென்மோர்கனில் தலா 2 செ,மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளின் நிலவரம்

நீர்பிடிப்பு பகுதிகளான மேல்பவானி, அவலாஞ்சி, மூக்கூர்த்தி ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்தும் வினாடிக்கு 500 முதல் 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தற்போது மாவட்டத்தில் உள்ள 13 அணைகளில் நீர் 90 சதவீதம் நிரம்பியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகள் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் விரைவில் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் அணைகளுக்கு வரும் நீரின் அளவுகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தை விட மழைப் பொழிவு இன்று குறைவாக இருந்தாலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆகையால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மோனிஷா

காதல் முக்காட்டை கலைத்த ஆற்று வெள்ளம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *