சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகம்

தமிழகத்தில் சிவகங்கை மற்றும் சேலம் மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (அக்டோபர் 7) சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி, ஓமலூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்ததுள்ளனர். சோதனையில் அவர்களிடம் துப்பாக்கி, கத்தி போன்ற பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகத் தெரியவந்தது.

மேலும் , விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களைக் காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காகத் துப்பாக்கிகளைத் தயாரித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த நான்கு மாதங்களாக விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரும் நாட்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கித் தயாரிப்பதற்கு உதவியாக இருந்ததாக நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.

விக்னேஷ்வரன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்று அங்கு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சிவகங்கை மன்னார் துரை சிங்கம் கல்லூரி எதிரில் இருக்கும் அவரது வீட்டில் உள்ளூர் காவல் அதிகாரிகளுடன் சேர்ந்து சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில் நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆயுதங்கள் தயாரித்ததாக கூறப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு மலையடிவார பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த சோதனையில் கேப்டன் பிரபாகரன் புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது விக்னேஷ்வரன் வீட்டில் இல்லை. அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விக்னேஷ்வரன் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்று தகவல்கள் வெளியானது.

இதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில், விக்னேஷ்வரன் கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. அவர் ஒரு அனுதாபி மட்டும் தான் என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

திமுக தலைவர் பதவி: 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ஸ்டாலின்

பொதுக்குழு ஏற்பாடு: ஸ்டாலின் ஆய்வு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

1 thought on “சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

  1. தீவிரவாதி என்று சொல்ல வில்லை இதே முஸ்லீம் சமூகத்தார் என்றால் தீவிரவாதி என்று சொல்வது தோடு முஸ்லீம் என்ற வார்த்தையும் சேர்த்து கொள்வீர், எல்லா மீடியாவும் வலதுசாரிக்கு ஆதரவாக தானே இருக்கு…. நீதி நேர்மை எல்லாம் ஏட்டோடு தானோ?!

Leave a Reply

Your email address will not be published.