சென்னையில் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று (நவம்பர் 8) அதிகாலை முதல் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான படப்பை, பள்ளிக்கரணை, மறைமலைநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெறுவதாக கூறப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முன்னா என்பவரது வீட்டிலும், படப்பையில் சபாபுதீன் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, படப்பையில் வசித்து வரும் சபாபுதீன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர் திரிபுரா மாநிலத்தவர் போன்று போலி ஆதார் அட்டை தயாரித்து வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சபாபுதீனை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதே போன்று மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர்களை போன்று போலி ஆதார் அட்டை தயாரித்து ஏன் வசித்து வந்தார்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் கைதான 3 பேருக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை போன்று திருப்பூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
ராஷ்மிகா.. கத்ரீனா… டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?