தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (ஜனவரி 28) காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்ப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து சென்னை, சீர்காழி உட்பட சுமார் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழியில் திருமுல்லைவாசலை சேர்ந்த பாசித், எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகள் உள்பட 15 இடங்களில் அதிகாலை 3 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் நடைபெற்ற சோதனையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 25 வயதான அல்பாசித் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அல்பாசித் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை என்ஐஏ கைது செய்தது. இந்த வழக்கில் என்ஐஏ விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்ட கூட்டுச் சேர்ந்தது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.