சட்டவிரோதமாக போதை மருந்துகள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி உள்ளனர்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அதிகாலை முதல் மாலை வரை சோதனை நடத்தினார்கள். சிறப்பு முகாம் குறித்து மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த தொடர் தகவல்களை அடுத்து கிடைத்த சோதனை முடிவில் என்.ஐ.ஏ வெளியிட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
போதை மாஃபியா கும்பல்!
அதில், “இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போதை மருந்து கடத்தல் நடைபெற்று வருவது தொடர்பாக என்.ஐ.ஏ. தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் திருச்சி, செங்கல்பட்டு, சென்னை. திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஜூலை 20 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் மாஃபியாவைச் சேர்ந்த குணசேகரன் என்கிற குணா, புஷ்பராஜ் என்கிற பூக்குட்டி கண்ணா ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவரோடு இணைந்து போதை மருந்துக் கடத்தல், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டமைப்பதற்காக இவர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சோதனையின் போது பல்வேறு டிஜிட்டல் கருவிகளும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
போதை மருந்து மாஃபியா என்று என்.ஐ.ஏ. பெயர் குறிப்பிட்டுள்ள குணசேகரன், பூக்குட்டி கண்ணன் ஆகியோருடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள திலீபன், ஸ்டான்லி பெர்னான்டோ கென்னடி, சுரங்கா பிரதீப், கோட்ட காமினி, முகமது ஆஸ்மின், பண்டாரா, முகமதுரிகாஸ், தனுஷ்கா ரோஷன், நிசாந்தன், லடியா சந்திரசேனா உள்ளிட்ட 12 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது செல்போன்கள், லேப்டாப்புகள், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில் என்.ஐ.ஏ சோதனை
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சந்தேகத்துக்குரிய ஒருவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். முடிவில் சந்தேகத்திற்கு இடமான டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதை மாஃபியாக்கள் இந்தியா, இலங்கையில் விடுதலைப் புலிகளை மீள் கட்டமைப்பு செய்வதற்காக செயல்படுகிறார்கள் என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது என்.ஐ.ஏ. மேலும் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் என்.ஐ.ஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நிதியை விட நிர்மலாவுக்கு நிதானமே தேவை: முரசொலி