சென்னை உட்பட 25 இடங்களில் என். ஐ. ஏ அதிகாரிகள் இன்று (ஜூலை 20) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் விழிஞம் கடற்பகுதியில் 2021 மார்ச் 21ஆம் தேதி இலங்கை படகு ஒன்றை கடலோர காவல்படையினர் பிடித்தனர். அந்த படகில் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த போதைப் பொருட்கள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ள போதை கும்பல் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் தொடர்புடையதாக கூறி சென்னையில் வசிக்கும் இலங்கை அகதிகளான சுரேஷ் மற்றும் செளந்தர ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான் இன்று ஹெராயின் வழக்கில் சென்னை, திருச்சி உட்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, சேலையூர் கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களிலும், திருச்சியில் 11 மற்றும் திருப்பூரில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா