ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகையில் இன்று (டிசம்பர் 9) ஆய்வு செய்தனர்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் ஒன்றாம் எண் கேட் முன்பு ரவுடி கருக்கா வினோத் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசினார்.
உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து விசாரித்ததில், சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் தராததால் தான் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் கொடுத்தார்.
தொடர்ந்து கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் குற்றவாளி தப்பித்து விட்டதாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டிய நிலையில்,
ரவுடி கருக்கா வினோத் சம்பவம் நடந்த உடனே போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று சிசிடிவி காட்சி ஆதாரங்களோடு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராஜ் ரத்தோர் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சில தினங்களுக்கு முன்பு தான் காவல்துறை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தது.
பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களுடன் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடத்த போது பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்காக அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மனம் திறந்த அமீரின் பகிரங்க கடிதம்: மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து!
விமர்சனம் : கான்ஜுரிங் கண்ணப்பன்