இலங்கை மற்றும் இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சி வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை இன்று(ஆகஸ்ட் 25) கைது செய்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரை விழிஞ்சம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் கையில் எடுத்து வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர், திருச்சி உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் திருச்சி சிறப்பு முகாமைச் சேர்ந்த 8 இலங்கையர்கள் உட்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. மேலும் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் பல மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் போதைப்பொருள் கடத்தலுக்கான ஆவணங்கள், 80 லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒன்பது கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், இலங்கை மற்றும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டும் முயற்சியில் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் சேர்ந்து போதைப்பொருள் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதில் முக்கிய குற்றவாளிகளாக சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா என்று என்.ஐ.ஏ அறிவித்தது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோதமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ’ஆதி லிங்கம் என்ற லிங்கம்’ என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் இன்று கைது செய்துள்ளனர்.
லிங்கம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் குணசேகரனின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குணசேகரனின் பினாமியாக செயல்பட்டு வந்த லிங்கம் பல்வேறு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ய உதவியதும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தலுக்கான சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு உதவி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்குவதற்காக போலி ஆவணங்களை லிங்கம் தயாரித்து கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக கிடைக்கும் பணம் மூலம் இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்துள்ளோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
World Championship: ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ்
பெண்களை குறிவைத்து பேசுவதா?: ஹெச்.ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!