வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (டிசம்பர் 6) தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று (டிசம்பர் 7) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நாளை (டிசம்பர் 8) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் யாரும் டிசம்பர் 10-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
செல்வம்
நெய்வேலி என்எல்சி விவகாரம்: களத்தில் போராடவும் தயார் – அன்புமணி