கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது தந்தை பாபு தமிழக மின்வாரியத்தில் பணி புரிந்துள்ளார். இதனால், குடும்பத்தினர் கோவைக்கு குடி பெயர்ந்துள்ளனர். ஸ்ருதி கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலை பார்த்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுசீந்திரத்தை சேர்ந்த செண்பகவள்ளி என்பவரின் மகனான கார்த்திக் என்பவருடன் ஸ்ருதிக்கு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 10 லட்சம் ரொக்கமும் 50 பவுன் நகையும் கொடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கும் மின்வாரியத்தில்தான் பணி புரிகிறார்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த நாளில் இருந்து கார்த்திக்கின் தாயார் ஸ்ருதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கணவருடன் சேர்ந்து இருக்க கூடாது, ஒரே அறையில் உறங்கக் கூடாது என்று கூறி துன்புறுத்தியுள்ளார்.
மேலும், கூடுதல் வரதட்சணை வாங்கி வா… இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கே போய் விடு என்று கூறி மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்த கொடுமைகளையெல்லாம் ஸ்ருதி தனது தாயிடத்தில் போனில் கூறி அழுதுள்ளார். அப்போது, அவரின் தாய் அட்ஜஸ்ட் செய்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி கணவர் வீட்டிலேயே ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த பாபு குடும்பத்தினர் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தனர். அதில், மாமியாரின் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்ததாக கூறியிருந்தார்கள். அதோடு, திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் நாகர்கோவில் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட மாமியார் செண்பகவல்லி விசாரணைக்கு பயந்து நேற்று விஷம் குடித்தார். இதனால், மயங்கி விழுந்த செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்