கிச்சன் கீர்த்தனா: புத்தாண்டு முதல் ‘டயட்’டைக் கடைப்பிடிக்கப் போறீங்களா?

தமிழகம்

புத்தாண்டில் பலர் சில சபதங்களை எடுத்துக்கொள்வார்கள். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டயட் அவசியம் என்று நினைப்பார்கள். ஆனால், டயட்டைப் பின்பற்றுவதும் சரி, உடற்பயிற்சிகள் செய்வதும் சரி… பலருக்கும் சிரமமாகவே இருக்கும்.

‘‘நான் இன்னிலேர்ந்து டயட்ல இருக்கப் போறேன்’’ எனச் சொல்பவரை வேற்று கிரகவாசி போலப் பார்க்கும் பலருக்கும் அதன் பின்னணியில் உள்ள சவால்களும் சங்கடங்களும் புரிய வாய்ப்பில்லை. உணவுக் கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து பின்பற்ற அசாத்தியமான மன உறுதி அவசியம். அந்த மன உறுதி குறையாமல் பார்த்துக்கொள்வதுதான் டயட் செய்வோரின் மிகப் பெரிய சவாலே. சரி… உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் பின்பற்றுவது எப்படி?

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள், ‘‘உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு இரண்டையும் சலிப்பான விஷயங்களாக நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். கடமைக்காகவும் தலையெழுத்தே என்றும் செய்யாமல், அது உங்கள் ஆரோக்கியத்துக்கான அடித்தளம் என்பதை உணருங்கள். டயட் உணவுகளுக்கான ஷாப்பிங்கை என்ஜாய் செய்யுங்கள். என்ன சமைக்கப் போகிறீர்கள், எந்த வேளைக்கான உணவு எனத் திட்டமிட்டு ஷாப்பிங் செய்யுங்கள்.

வீட்டில் எப்போதும் பழங்கள் நிறைந்த கிண்ணம் இருக்கட்டும். பழங்களில் கலோரி குறைவு என்பதால் திடீரெனப் பசிக்கும்போது வேறு நொறுக்குத்தீனிகளுக்கு பதில் இவற்றில் சிறிது சாப்பிடலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தேடலுக்கும் இது மாற்றாக இருக்கும். டயட் உணவுகள் சமைப்பதற்கு சிரமமானவை என்று நினைக்க வேண்டாம். ஒன்பாட் (One Pot) சமையலை முயற்சி செய்யலாம். ஒரே பாத்திரத்தில் எல்லாவற்றையும் சேர்த்துச் சமைப்பதே ஒன்பாட் குக்கிங். தனித்தனியே வதக்க, வறுக்க, வேகவைக்கத் தேவையிருக்காது. நேரமும் செலவும் வேலையும் மிச்சம்.

New Year Dieting plan

டயட் உணவில் வெரைட்டி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தினம் ஒன்றாக முயற்சி செய்து பாருங்கள். பிடித்திருக்கிறது என்றோ, செய்வதற்கு எளிதானது என்றோ ஒரே உணவை தினமும் சமைத்துச் சாப்பிட்டால் சீக்கிரமே அலுத்துப் போகும்.

டயட் உணவுகளை எப்படியெல்லாம் புதுமையாக, சுவாரஸ்யமாக, சுவையாகச் சமைக்கலாம் என இணையதளத்தில் தேடுங்கள். ஓர் உணவு மூன்று வேளைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது என்றால் அதை மொத்தமாகச் சமைத்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு சூப், பொரியல் போன்றவை.

டயட்டை எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாதீர்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது, வெளி உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வேண்டாம். அதேநேரம் சில உணவுகளை அவ்வப்போது தைரியமாக முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு… முசேலி, சிறுதானிய நூடுல்ஸ், சிறுதானியக் கஞ்சி, கோதுமை மஃபின்ஸ், யோகர்ட் போன்றவை.

என்ன உணவு சமைக்கிறீர்கள் என்பதைப் போல அதை எப்படிச் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உதாரணத்துக்கு டீப் ஃப்ரையாக செய்து சாப்பிடக்கூடிய உணவை, ஒரு மாறுதலுக்கு கிரில் செய்தோ, பேக் செய்தோ, மைக்ரோவேவில் சமைத்தோ சாப்பிடலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் ஆரோக்கிய உணவுகளை மிஸ் பண்ணாதீர்கள்.

கட்டுப்பாடான உணவுப் பழக்கத்துக்குப் பழகிவிட்டால், ஒரு கட்டத்தில் அது உங்கள் வாழ்வியல் முறையாகவே மாறிவிடும். என்றோ ஒருநாள் பார்ட்டி, ட்ரீட் என வழக்கத்துக்கு மாறான உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை.

டயட்டை ஸ்ட்ரிக்ட்டாகப் பின்பற்றுவோர், எந்த உணவையும் தியாகம் செய்யவும் தேவையில்லை. பிடித்த உணவுகளின் அளவைக் குறைத்து, அடிக்கடி சாப்பிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும். டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சத்தான உணவுகளை மிஸ் செய்வதில்லை என்பதை உணருங்கள்.

உங்களுடைய முயற்சி உங்கள் தோற்றத்தில், சருமத்தில் பிரதிபலிக்கும். அதைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சர்யப்படும்போதுதான் உங்கள் மன உறுதிக்கான பலனையும் உணர்வீர்கள்’’ என்கிறார்கள்.

கேரள ப்ளம் கேக்

ஃபுட் பாய்சன்: காரணங்களும் தீர்வுகளும்…

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *