புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள்!

தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு நெருங்கி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்க மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வது சிறந்தது.

டிசம்பர் 31 ஆம் தேதி மாலை சுமார் 90,000 காவல்துறையினர் மற்றும் 10,000 ஊர்காவல் படையினர் என 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சோதனை நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. டிசம்பர் 31 ஆம் தேதி இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் கைது செய்யப்பட்டு அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரியப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்குக் குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.

வெளியூர்களுக்குச் செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற தொலைப்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் இரகசியம் காக்கப்படும்.

கட்டணமில்லா தகவல் தரும் அவசர உதவி தேவைப்படுபவர்கள் ‘காவல் உதவி’ என்ற அதிகாரப்பூர்வ செயலியைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதற்கு ‘காவல் உதவி’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம். அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாடத் தமிழகக் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

நீலகிரி வரையாடு பாதுகாப்பு: தமிழக அரசு புது திட்டம்!

’பப்பு’ பெயர்: ராகுல் சொன்ன நச் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *