புத்தாண்டு கொண்டாட்டம் : போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் சென்னை!
சென்னையில் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு சமயத்தில் இளைஞர்கள் பைக்ரேஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தலைமையில் ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை காவல் துறை.
அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சென்னை காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்தம் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாளை (டிசம்பர் 31) இரவு 09 மணியிலிருந்து மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை. வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்ளும்.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மாலை முதல் 01.01.2024 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் அதிகாரிகள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும்.
முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும்.
குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். இதனை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி: எடப்பாடி நம்பிக்கை!
Video: நிவாரண பொருட்கள் வேணாம்… விஜய்க்கு ஷாக் கொடுத்த இளம்பெண்!