திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. new tidal park in Trichy and Madurai
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடனும்,
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை தளம் மற்றும் பன்னிரண்டு தளங்களுடனும் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கு, காணொலிக் காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 19) அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு செயல்படுவதாக, ஒன்றிய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி 608 160 பூங்காக்கள் அமைக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் முதலமைச்சர் 22.11.2024 அன்று திறந்து வைத்தார்.
இந்தநிலையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இப்பூங்காக்கள் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு. குளிர்சாதன வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இதன்மூலம், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. new tidal park in Trichy and Madurai