“புதிய மணல் குவாரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத்துறையானது, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.
மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும், சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது. இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த ஜூலை 16ம் தேதியே தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்து.
அந்த அமைப்பு, “உரிய ஆய்வுகள், வழிகாட்டுதல்கள், கண்காணிப்புகள் இன்றி ஆற்று மணல் குவாரிகள் அமைப்பதால் ஆற்றுப்படுகை அழிந்து நிலத்தடியில் நீர் சேகரமாவது தடைபடும்.
ஆற்றின் கரைகள் உடைக்கப்படுவதோடு, தடுப்பணைகளின் மணல் அரிப்பு ஏற்பட்டு கட்டுமானம் நிலைகுலையும். ஆறுகளின் இயல்பான நீரோட்டம் தடைபடுவதோடு ஆற்றங்கரை உயிர்ப்பன்மையத்தின் சமநிலை கெடும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட விஷயங்களைக் கருத்தில்கொண்டு புதிய ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதையும், மணல் அள்ளும் முறையை இயந்திரமாக்கும் முயற்சிகளையும் தமிழக அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்திருந்தது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால் அவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஜூலை 18ம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும், புதிய மணல் குவாரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 16) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தில் எந்த இடத்திலும் விதிப்படி மணல் அள்ளப்படவில்லை. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது நாட்டிற்கும், மக்களுக்கும் ஆபத்தானது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 25க்கும் கூடுதலான மணல் குவாரிகள் உள்ளன. புதிதாக 9 மணல் குவாரிகளை திறக்கவும், 30 மாட்டு வண்டி மணல் குவாரிகளை சரக்குந்து குவாரிகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவையே தேவையில்லை எனும் போது கூடுதல் புதிய குவாரிகள் எதற்கு? மணலுக்கு ஏராளமான மாற்று வழிகள் உள்ளன. ஆனால், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் காக்க மாற்று வழிகள் இல்லை. எனவே, சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும்; பழைய மணல் குவாரிகளையும் மூட அரசு முன்வர வேண்டும்” என கூறியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்