திருச்சியில் புதிய மின்சார ரயில் பராமரிப்பு முனையம்!

தமிழகம்

திருச்சி மஞ்சத்திடலில் ரூ.55 கோடியில் புதிய மின்சார ரயில் பராமரிப்பு முனையம் தொடங்கப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் ரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சி கோட்டத்தில் மின்சார ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி கோட்டத்துக்குட்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் மின்மயமாக்கல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் டீசல் என்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்படுவது தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து டீசல் என்ஜின் ரயில்கள் படிபடியாக மின்சார ரயில்களாக மாற்றப்படுகிறது. ஏற்கனவே தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் மற்றும் சென்னை ரயில்வே கோட்டங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சி கோட்டத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

டீசல் ரயில்கள் மின்சார ரயில்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு, ஆவடி, தாம்பரம், ஆகிய பகுதிகளில் மின்சார ரயிலுக்கான பராமரிப்பு முனையம் இயங்கி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரி, “திருச்சி பொன்மலை அருகே உள்ள மஞ்சத்திடல் ரயில் நிலைய பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் மின்சார ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.55 கோடி ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு (2023) தொடங்கி 2024ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதில் ஒரே நேரத்தில் இரண்டு மின்சார ரயில்களை பராமரிக்கும் வகையில் முனையம் அமைய உள்ளது. இதனால் திருச்சி கோட்டத்தில் தற்போது சாதாரண பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் பயணிகள் ரயில் வண்டிகளும், டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் வண்டிகளும் படிப்படியாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டிகளாக இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.