சட்டமன்ற கூட்டத் தொடக்க நாளில் அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இன்று (செப்டம்பர் 23) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contribution Pension Scheme) நடைமுறையில் உள்ளது.
இதனை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதற்காகவே CPS ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக.
ஆனால் தற்போது வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே நடைமுறையில் உள்ளது.
ஆனால் கடந்த 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 100% நிறைவேற்றி விட்டோம்”என்று பேசினார்.
இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வரும் அரசு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆட்சிக்கு வந்த பின்பு ஏதேதோ காரணம் கூறி வாக்குறுதியை நிறைவேற்ற தயங்குவதாக அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாட்டுக்கான தயாரிப்புக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.ஜெயராஜராஜேஸ்வன் தலைமை வகிக்க, பிரெடெரிக் ஏங்கெல்ஸ் மற்றும் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 ன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல்,
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 100% நிறைவேற்றி விட்டோம் என்று உண்மைக்கு மாறாக அறிவித்த தமிழ்நாடு முதல்வரின் செயலுக்கு எதிராக சட்டமன்ற கூட்டம் தொடங்கும் அக்டோபர் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அதன் பின்னர் வரும் அக்டோபர் 28ஆம் தேதி திருச்சியில் மாநில அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது எனவும், மாவட்டத்திற்கு 25 நபர்கள் மாநாட்டில் பங்கேற்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
துரைமுருகனை வைத்து விளையாட்டா?: அண்ணாமலை கேள்வி!
ரூ.451 கோடியில் வாரணாசி ஸ்டேடியம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்!