வரும் நவம்பர் 26 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 26 ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும். இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
எனவே ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு என்பது 31 செ.மீ ஆகும். எனவே இந்த காலக்கட்டத்தில் நடப்பாண்டு 15 செ.மீ மழை குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா