தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் கடந்த ஒரு வார காலமாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்த இதன் தீவிரம் தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 16 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் காற்றின் திசை காரணமாகவும், காற்றில் நிலவும் ஈரப்பதம் காரணமாகவும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கரையை நோக்கி நகரும் போது வலுப்பெற்று புயலாக மாற சாதகமான சூழல் நிலவுவதாக வெப்ப மண்டல புயல்களைக் கண்காணிக்கும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றால், தமிழக கடற்கரை பகுதிகளான கடலூர், நாகப்பட்டினம் இடையே அல்லது விசாகப்பட்டினம் – சென்னைக்கு இடையே நவம்பர் 20 – 22 தேதிக்குள் கரையைக் கடக்கக் கூடும்.
அடுத்ததாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா
பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்!
டி20: இங்கிலாந்தின் இளம் புயல் சாம் கரன் வென்ற இரு பட்டங்கள்!