தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 12) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர்,
ஈரோடு, விழுப்புரம் ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (டிசம்பர் 13) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில்,
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 14 ஆம் தேதி லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 15 ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் கடற்கரையில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மோனிஷா
கனமழை : மாணவர்களுக்கு அரைநாள் விடுப்பு!
ஜி. வி பிரகாஷுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்