தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் இன்று (நவம்பர் 16) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில்,
காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து,
18-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்ககடல் பகுதியில் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, நவம்பர் 19-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 20-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் மூன்றாவது சுற்று மழை தொடங்கி ஒரு வாரம் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
செல்வம்
திருமலையைப் போன்று திருவண்ணாமலை: அமைச்சர்கள் தகவல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!