வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாக உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 12) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாகவே தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன்காரணமாக தமிழகத்தின் 25க்கும் அதிகமான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.
அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பொழிந்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள், வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன.
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து இருக்கிறது.
இன்று அதிகாலை நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் நவம்பர் 16ம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இன்று நாகையில் கரை கடந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழக உள் மாவட்டங்கள், கேரளா, வழியாக மேற்கு – வடமேற்கு திசையில் அரபிக்கடலுக்கு அடுத்த 2 நாட்களில் நகரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசுக்கு இழப்பு : அமைச்சரை விடுவிக்க மறுப்பு!