தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன்(நவம்பர் 30) தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக் கண்ணன் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.
அவரது இடத்தில் ஐபிஎஸ் அதிகாரி சங்கர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இன்று (நவம்பர் 30)நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் மிக முக்கியமான காவல்துறை பதவியான சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்பது பற்றி மின்னம்பலத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி,
‘அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார்? ஆறு பேர் பட்டியல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவிக்கு ஆவடி கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா, ஏடிஜிபி அட்மின் சங்கர், ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.
அந்த செய்தியில் இந்த பதவிக்கு வரப் போகும் ஆறு அதிகாரிகளில் நான்காவதாக சங்கர் ஐபிஎஸ் பெயரைக் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த பின்னணியில் இன்று நவம்பர் 30ஆம் தேதியுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணனின் பதவி முடிவடைவதால், அந்த பதவிக்கு சங்கர் ஐபிஎஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் மேலும் விசாரித்தபோது, “இந்த ஆறு பேரில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
காவல்துறையின் உயர் பதவிகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவிக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரை நியமிக்க முதல்வரும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை செய்தனர்.
அதில் சந்திப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால், சங்கர் மூவர் பெயரைப் பரிசீலனை செய்தனர்.
உளவுத்துறை கூடுதல் டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபியும் முதல்வருடன் ஆலோசனை செய்து அதன் முடிவில் சங்கர் ஐபிஎஸ் சை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்க முடிவு செய்தனர்” என்கிறார்கள் ஐபிஎஸ் அதிகாரிகள்.
கி.சங்கர் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1968 ஜூன் 18 ஆம் தேதி பிறந்தவர். சென்னை ஐஐடி யில் பி. டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.
தமிழ், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் தெரிந்தவர். 1996 பேட்ச் அதிகாரியான சங்கர் இதுவரை புதுக்கோட்டை எஸ் பி, சேலம் கமிஷனர், மேற்கு மண்டல ஐஜி, வடக்கு மண்டல ஐஜி, மத்திய போதைத் தடுப்பு பிரிவு என பணியாற்றியவர்.
ஃபீல்டு ஒர்க் எனப்படும் களப்பணியில் கைதேர்ந்தவர் சங்கர் ஐபிஎஸ் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.
சங்கருக்கு சவாலான காலம் காத்திருக்கிறது!
–வணங்காமுடி
விநியோக உரிமை: போட்டியில் விஜய், அஜித் படங்கள்
கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு