புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் உருவாக்கம்!

Published On:

| By Selvam

new education policy jananayaga kalvi pathukappu kootiyakkam

அரசியல் சாசனம் முன் வைக்கும் மாண்புகளான ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய கல்வி கொள்கையை கொண்டு வர கல்வியில் அக்கறை கொண்ட அனைத்து இயக்கங்களையும் கல்வியாளர்களையும் ஒருங்கிணைத்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமே கொரோனா பெருந்தொற்றில்‌ உயிரிழப்பு, வருமான இழப்பில்‌ தடுமாறி கொண்டிருந்த போது, இந்தியாவில்‌ சத்தமின்றி புதிய தேசிய கல்விக்‌ கொள்கை (2020) நடைமுறைக்கு வந்தது.

வருங்கால தலைமுறையை வடிவமைக்கும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த இக்கொள்கை நாடாளுமன்றத்தில்‌ கூட விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. இதன்‌ வார்த்தை ஜாலங்களைக்‌ கடந்து உண்மை பொருளைத்‌ தேடினால்‌ பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்தியா சுதந்திர பவளவிழா கண்டபின்னும்‌, அனைவருக்கும்‌ ஆரம்பக்‌ கல்வி சாத்தியம்‌ ஆகவில்லை. ஆனால்‌, ஏற்கனவே உள்ள அரசு பள்ளிகளை மூடும்‌ பணியை புதிய தேசிய கல்விக்‌ கொள்கை முடுக்கி விட்டுள்ளது. இந்த பள்ளி மூடல்‌ கொள்கைக்கு, உள்ளடங்கிய கிராமங்கள்‌, மலை உச்சி என எதுவும்‌ விதிவிலக்கு இல்லை.

நாடு முழுவதும்‌ இருக்கும்‌ கல்லூரிகள்‌ அனைத்தும்‌, பட்டம்‌ தரும்‌ தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றப்பட உள்ளன.

பெரும்பாலான உயர்‌ கல்வி நிறுவனங்கள்‌ தனியார்மயமாகிவிட்ட நிலையில்‌, உயர்‌ கல்வியில்‌ வணிகமயம்‌ மேலும்‌ உச்சம்‌ தொடும்‌ வாய்ப்புகள்‌ வாரி வழங்கப்படுகின்றன.

தொழில்‌ கற்பிப்பு என்ற பெயரில்‌ குலக்கல்விக்கு அடி போடப்படுகிறது. மழலைப்‌ பருவக்‌ கல்வி தொடங்கி ஆராய்ச்சி கல்வி, வயது வந்தோர்‌ கல்வி வரை ஒட்டு மொத்தமாக மையப்‌ படுத்தப்‌படுகிறது. பொதுப்‌ பட்டியலில்‌ இருக்கும்‌ கல்வி மத்திய பட்டியலுக்கு முழுமையாக போய்விடுமோ என்கிற அச்சம்‌ தோன்றுகிறது.

மாநில கல்வி கவுன்சில்‌ வெறும்‌ தலையாட்டி பொம்மையாக மாறும்‌ அபாயம்‌ உள்ளது. மத்திய அரசின்‌ கடந்த கால நடவடிக்கைகள்‌, ஒரே நாடு ஒரே கலாச்சாரம்‌ உள்ளிட்ட முழக்கங்கள்‌ இந்தியாவின்‌ பன்மைத்துவத்தை சிதைக்கக்‌ கூடியவை.

தேசிய கல்விக்‌ கொள்கையின்‌ பல இடங்களில்‌ இடம்‌ பெறும்‌ ‘இந்தியத்‌ தன்மை’ சனாதனத்தை தூக்கி நிறுத்தும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம்‌ உள்ளிட்ட வார்த்தைகள்‌ தேடினாலும்‌ கிடைக்கவில்லை.

இது புதிய கல்வி கொள்கை அல்ல, இதுவரை கல்வியில்‌ கிடைத்த முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளும்‌ கொள்கை. இதனை மத்திய அரசு திரும்பப்‌ பெறுவது தான்‌ நாட்டுக்கு நல்லது.

தேசிய அளவில்‌ எதிர்ப்பு இயக்கங்கள்‌ வலுப்பெற்று வருகின்றன. புதிய தேசிய கல்விக்‌ கொள்கை உருவான காலம்‌ தொட்டே இதில்‌ வெகு கவனமாக செயல்பட்டு, எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள்‌ உட்பட அனைத்து அமைப்புகளையும்‌ ஒருங்கிணைக்கும்‌ முயற்சி சென்னையில்‌ 19.08.23 அன்று BEFI அரங்கில்‌ நடந்த கூட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டது.

அரசியல்‌ சாசனம்‌ முன்‌ வைக்கும்‌ மாண்புகளான ஜனநாயகம்‌, சமத்துவம்‌, மதச்சார்பின்மை, அறிவியல்‌ கண்ணோட்டம்‌ போன்றவற்றை உள்ளடக்கிய கல்விக்‌ கொள்கையை கொண்டு வர, கல்வியில்‌ அக்கறை கொண்ட அனைத்து இயக்கங்களையும்‌, கல்வியாளர்களையும்‌ ஒருங்கிணைத்து, ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கல்வி கொள்கை 2020ஐ திரும்ப பெற்றிடுக. ஜனநாயக மதச்சார்பற்ற அறிவியல்‌ சார்‌ கல்விக்‌ கொள்கையை உருவாக்கிடுக என்ற முழக்கங்களை முன்‌ வைத்து இளைய தலைமுறையை, இந்தியாவின்‌ எதிர்காலத்தைப்‌ பாதுகாக்க உறுதி ஏற்றுள்ள இக்கூட்டியக்கத்தை ஆசிரியர்‌ சங்கங்கள்‌, ஜனநாயக அமைப்புகள்‌, கல்வியாளர்கள்‌ இணைந்து உருவாக்கியுள்ளனர்‌. இந்த அமைப்பின்‌ ஒருங்கிணைப்பாளராக தமிழ்‌ நாடு அறிவியல்‌ இயக்கத்தின்‌ பொதுச்‌ செயலாளர்‌, எஸ்‌. சுப்ரமணி, நிதிக் காப்பாளராக தமிழ்‌ நாடு ஆரம்பப்‌ பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியின்‌ பொதுச்‌ செயலாளர்‌ ச.மயில்‌ ஆகியோர்‌ தேர்வு செய்யப்பட்டனர்‌.

கல்வியாளர் நா.மணி, AUT மாநில தலைவர் காந்திராஜன் உள்ளிட்டோரை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்ற ஒவ்வொரு சங்கம்‌ அமைப்பு சார்பில்‌ அதன்‌ தலைவர்‌ அல்லது செயலாளரைக்‌ கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும்‌ உருவாக்கப்பட்டது. ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியகத்தின்‌ நோக்கங்களை ஏற்றுக்‌ கொள்ளும்‌ சங்கங்கள்‌, அமைப்புக்கள்‌, கல்வியாளர்கள்‌ ஆகியோரை இந்தக்‌ கூட்டியக்கத்தில்‌ இணைத்துக்‌ கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தக்‌ கூட்டியகத்தின்‌ பிரதான முழக்கங்களை முன்‌ வைத்து இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று (02/10/23) சென்னையில்‌ மாபெரும்‌ மாநாட்டை நடத்துவது என்று கூட்டியக்கம்‌ ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

கூட்டியக்கத்தின்‌ ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌, 02/09/23 சனிக்கிழமையன்று சென்னையில்‌ நடைபெறும்‌. அப்போது, கூட்டியக்கத்திற்கு வலு சேர்க்கும்‌ விதமாக இன்னும்‌ கூடுதலான அமைப்புகளை இணைத்துக்‌ கொண்டு தேசிய கல்விக்‌ கொள்கை 2020 எதிர்ப்பு மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

“நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை” – ஸ்டாலின்

உதயநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம்: எடப்பாடி பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share