டிசம்பர் 5 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும்(நவம்பர் 30), நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.12.2022 மற்றும் 03.12.2022 ஆகிய 2 தினங்களில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.12.2022 அன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், அந்தமான் கடல் பகுதியில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.