திருச்சி மற்றும் மதுரையில் புதிதாக டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
’ஏடிஎஸ்’ கொசு வகையால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு சென்னை மதுரவாயலில் 4 வயது சிறுவன், புதுச்சேரியில் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்ததுள்ளனர். திருவாரூரில் காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் சிந்து என்பர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதனிடையே கடந்த ஒரு வாரத்தில் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கும்பகோணம், உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் 49 பேரில் 1 குழந்தை உட்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி, தலை வலி ஆகியவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலும் மக்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மோனிஷா
மகளிர் இட ஒதுக்கீடு: மோடி அரசின் மாபெரும் ஏமாற்று
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சோனியா காந்தி தலைமையில் இன்று விவாதம்!