New Chief Secretariat Case

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

தமிழகம்

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் கலைஞர் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரும் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த கமிஷனை கலைத்து உத்தரவிட்டது.

ஆனால் இந்த விசாரணை ஆணையம், முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக ஆட்சியில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் முன்னாள் எம்பி ஜெயவர்தன் புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் 2018 ஆம் ஆண்டு தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பாக பொதுப் பணித் துறைக்கு புகார் அளித்ததாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயவர்தன் தரப்பில், “புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கு தொடர்பான ஆவணங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை பெற முடியாது. எனவே தனக்கு நீதி வழங்கும் வகையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டு தான் அளித்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிய நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பின் காவல்துறையினரின் நிறம் மாறிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயவர்த்தனை இணைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில் பிரமாண பத்திரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை நடைபெறவில்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இருப்பதால் மேல்முறையீட்டு வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளது. ஜெயவர்தன் 2018 ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி அது முடித்து வைக்கப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஜெயவர்த்தனை இணைக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய, அவர் அளித்துள்ள புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

பிரியா

பாஜக அலுவலக ஊழியரின் வீட்டில் சோதனை நிறைவு!

தொடர் விடுமுறை : 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம்… சீமான் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *