new app coming soon to complaint road damage

சாலை பாதிப்புகள்… புகார் அளிக்க செயலி: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

தமிழகம்

சாலைகளில் ஏற்படும் பாதிப்பை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிப்பதற்காக தனி செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் தரமான சாலைகள் அமைப்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று (செப்டம்பர் 22) கூட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ”தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே (அதாவது அக்டோபர் மாதம்) முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மெட்ரோ, கழிவுநீரகற்று வாரியம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை செயலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக உயர்மட்ட புருவங்களை வெட்டுதல், தாழ்ந்த புருவங்களை நிரப்புதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் உள்ள செடிகள், முட்புதர்கள் போன்ற தடைகள் நீக்கப்பட வேண்டும்.

மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் உள்ள (Catch pit) பிடிக்குழி, வடிகால் போன்றவற்றை மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மழை பெய்தவுடன் கள ஆய்வு செய்து, எங்கு மழைநீர் தேங்குகிறது, எங்கு மழை நீர் சாலையைக் கடக்கிறது போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மின் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர், மின்சார நீரேற்று பம்புகள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் உடனடியாகக் கொண்டு செல்ல ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவை அடிப்படையில் மணல் பைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும், “சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க, ஒரு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்” என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளபடி செயலி அறிமுகப்படுத்தப்பட்டால் மக்கள் சாலை பாதிப்புக்களை மொபைல் ஆப் மூலம் நேரடியாக நெடுஞ்சாலைத் துறைக்கு தாமாகவே தெரிவிக்க முடியும்.

முன்னதாக சாலை விபத்து மற்றும் சேவைகள் குறித்து மக்கள் புகார் அளிக்க ’1033’ என்ற கட்டணமில்லா தேசிய உதவி எண் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி: ஏசிடிசி நிறுவனர் மீது வழக்குப்பதிவு!

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0