கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சாதம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் சாதத்தோடு குழம்பு, பொரியல், வறுவல் சேர்த்து சாப்பிட விருப்பப்படுவது கிடையாது. சில நேரங்களில் வெரைட்டி ரைஸை விரும்புவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமாக சத்தான இந்த நெல்லிக்காய் சாதம் செய்து அசத்தலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும். பார்வைத் திறனை மேம்படுத்தும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும்.
என்ன தேவை?
பெரிய நெல்லிக்காய் – 2
வேகவைத்த சாதம் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பொன்னிறமானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய் சேர்த்துக் கிளறவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சாலட்
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?