வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் அவரது மகள் கதறி அழும் காட்சி பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
அங்குள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டது.
இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று இரவு தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் நெல்லை கொக்கிரக்குளம், சிந்துப்பூந்துறை, உடையார்பட்டி உள்ளிட்ட கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் உடையார்பட்டியில் தனது மகன், மகளுடன் வசித்தும் வந்த சிவா என்பவரின் வீடும் வெள்ளத்தில் சிக்கியது.
அவரது வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மூவரும் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அதனைக்கேட்டு அங்கள்ள அக்கம்பக்கத்தினர் முதலில் பிள்ளைகள் இருவரையும் மீட்டனர். ஆனால் தொடர்ந்து அதிகரித்து வந்த வெள்ளத்தால் சிவாவை இரவு நேரத்தில் காப்பாற்ற முடியவில்லை.
பின்னர் இன்று காலை மூச்சு திணறிய நிலையில் அவரை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரின் உடலை அனுமதிக்காத அந்த தனியார் மருத்துவனை நிர்வாகத்தினர் சிவாவின் உடலை வாசலிலேயே ஒரு பலகையில் வைத்தனர்.
தங்களுடன் உயிருக்கு போராடிய தந்தையை காப்பாற்ற முடியாத நிலையிலும், உடலை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள தங்களது வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்ய முடியாத நிலையிலும், அவரது மகளும், மகனும் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
மேலும் தற்போது இறுதிச்சடங்கு செய்ய முடியாத நிலையில், உயிரிழந்த சிவாவின் உடலை வெள்ளம் வடியும் வரை நெல்லை அரசு மருத்துவனையில் வைத்து பாதுகாக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”மீட்க முடியாத நிலையில் தூத்துக்குடி கிராமங்கள்”: மாரி செல்வராஜ் வேண்டுகோள்!
தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 1!