நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு இளைஞர் ஒருவர் இன்று (டிசம்பர் 20) ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று கொலை முயற்சி வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி என்பவரை அங்கு ஏற்கனவே காரில் காத்திருந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது.
இந்தப் படுகொலைப் பற்றி அங்குள்ள காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.
“பாளையங்கோட்டை சப் டிவிஷனில் குறிப்பிட்ட சில கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மூன்று சமூகத்தில் சில குழுக்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படும்.

அப்படி தான் கடந்த 2023 அக்டோபர் 13-ஆம் தேதி பாளையங்கோட்டை அருகில் கீழநத்தம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாயாண்டி, இசக்கி உள்பட சிலர் சேர்ந்து அவரை கொலை செய்தனர்.
அந்த வழக்கில் பிணையில் வெளியே வந்துள்ள மாயாண்டி, அவரது சகோதரர் மாரிசெல்வம் இருவரும் வேறு ஒரு கொலை முயற்சி வழக்கில் ஆஜராக இன்று நீதிமன்றம் வந்தனர்.
ராஜாமணி கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து மாயாண்டியை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இன்று மாயாண்டி நீதிமன்றத்திற்கு வருவார் என்று முன்கூட்டியே அறிந்து கொண்டவர்கள், நீதிமன்றம் எதிரில் வழக்கறிஞர் லோகோ ஒட்டிய KL 07 AJ 3485 கேரள பதிவெண் கொண்ட காருக்குள் காத்திருந்தனர்.

இதனை எதிர்பார்க்காத மாயாண்டி டீக்கடை பக்கம் செல்ல, அப்போது காரில் காத்திருந்த கும்பல் மாயாண்டியை நடு ரோட்டில் வைத்து சரமாரி வெட்டி முகத்தை சிதைத்தனர். பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் காரில் உடனடியாக தப்பிச் சென்றனர்.
கொலை சம்பவம் நடந்த ஸ்பாட்டில் கம்பன் என்ற வழக்கறிஞர் மற்றும் அவருடன் வந்த சில வழக்கறிஞர்கள் சேர்ந்து கொலை கும்பலில் வந்த ஒருவரை போலீசிடம் ஒப்படைத்தனர்
பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில், ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோர் சரண்டர் ஆனார்கள்.
உடனடியாக காவல்துறை அதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்” என்கிறார்கள்.
நீதிமன்றத்தின் முன்பு நடந்த இந்த கொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “எங்கும் கொலை; எதிலும் கொலை” என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.

நெல்லையில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி” என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், குமாரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
“அப்போது நீதிபதிகள், போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்துள்ளது.
காவல்துறை ஏன் இதை தடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினர். மேலும், கொலை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் – ஸ்டாலின் நம்பிக்கை!
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!