அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 21) நேரில் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.
கடந்த 17,18ஆம் தேதி பெய்த வரலாறு காணாத அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மேலும் அங்குள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகள் நிரம்பிய நிலையில் தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 5வது நாளாக இன்றும் வெள்ளம் வடியாததால், தனித்தனி தீவுகளாக அவை தத்தளிக்கின்றன.
இதனையடுத்து தொடர்ந்து வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் குழுக்களுடன் முப்படைகளும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. தமிழ்நாடு அரசு அமைச்சர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு ரூ12,659 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் நேற்று சென்னை திரும்பிய நிலையில், எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்துவதற்காக இன்று காலை 11.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்தார்.
அதன்பின்னர் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியுடன் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மறவன் மடம் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் குறிஞ்சி நகர். 3ஆம் கேட் ஆகிய பகுதிகளுக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை :ஆளுநர் ஒப்புதல்!
பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஒரு பாடம் : ராமதாஸ்