நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் படம் திரையிட்ட அலங்கார் தியேட்டரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வெளியான படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை இப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இந்த படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர்.
அதேவேளையில், காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக இப்படம் சித்தரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமரன் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அலங்கார் தியேட்டர் உள்ளது. இங்கு அமரன், கங்குவா படங்கள் திரையிடப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அலங்கார் தியேட்டரில் மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். பெட்ரோல் குண்டு தரையில் விழுந்ததால், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து தியேட்டர் நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மேலப்பாளையம் போலீசார், தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். மேலும், நெல்லையில் அலங்கார் தியேட்டர் உள்ளிட்ட அமரன் படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!
Comments are closed.