மறைந்த பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று (ஆகஸ்ட் 18) அவரது பெயர் நெல்லை டவுன் குறுக்குத்துறை சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.
நெல்லை டவுனைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன் பன்முக திறமையாளராக விளங்கினார்.
நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். எனவே அனைத்து மேடைகளிலும் காமராஜரை பற்றி பெருமையாக பேசுவார்.
குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது.
அதேவேளையில் தனது மேடைப் பேச்சுகளில் அதிரடியாக பேசியதால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறு பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக தனது 77வது வயதில் உயிரிழந்தார்.
அவரது நினைவாக நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்ட அம்மாவட்ட மாநகராட்சி முடிவு செய்தது.
இதுகுறித்த தீர்மானம் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று அச்சாலையில் நெல்லை கண்ணன் பெயர் பலகை வைக்கப்பட்டு, அதனை நெல்லை மாநகராட்சி மேயர் அதை திறந்து வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நெல்லை கண்ணனின் மகன் ஆறுமுகம், “ தென் வடல் சாலைக்கு எனது தந்தையின் பெயரை சூட்டி பெருமைபடுத்திய தமிழக முதல்வருக்கும், தொடர்ந்து கோரிக்கை வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் பெயர் பலகையை திறந்து வைத்த நெல்லை மேயர் ஆகியோருக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சரவணன்
காவிரி நீர் திறப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு!