குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யக் கோரி நெல்லையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 7) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மானூர் ஊராட்சி , முனைஞ்சிப்பட்டி பத்தினி பாறை இந்திரா நகர் குடியிருப்பு மக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை இந்த ஆண்டு பருவமழை என்பது மிக குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லையில் நகர் பகுதியில் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்திரா நகர் மற்றும் பத்தினி பாறை, முனஞ்சிப்பட்டி ஆகிய இடங்களில் கடந்த இரண்டு மாத காலமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் அந்த ஊரில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் 7HP மோட்டாருக்கு பதிலாக 10HP மோட்டாரை பயன்படுத்தி சட்ட விரோதமாக குடிநீரை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்கள்.
இந்த முற்றுகை போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் காலி குடங்களை வைத்து கோஷங்களை எழுப்பினர்.
இதன் காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
சரவணன் நெல்லை
திமுக அமைதிப் பேரணியில் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல்!
அமைச்சர் பிடிஆர் ஆடியோ வழக்கு: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!