நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

Published On:

| By Aara

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்  இன்று (மே 23) உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 4 ஆம் தேதி அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கரைசுத்து புதூர் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கை கால்கள் கட்டப்பட்டு உடல் முழுவதும் வயர்கள் சுற்றப்பட்டு எரிந்தும் எரியாத நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டது.

அதற்கு முன்னதாக அவர் நெல்லை மாவட்ட எஸ்பி.க்கு மரண வாக்குமூலம் என்ற தலைப்பிட்டு தனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள்தான் காரணம் என்று 32 பேரின் பெயர்களை சம்பவங்களோடு பட்டியலிட்டு எழுதி இருந்தார்.

மே 4 ஆம் தேதி ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பின் தனிப்படைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை இன்ஸ்பெக்டர்களை இந்த தனிப்படைகளில் ஈடுபடுத்தி விசாரணை நடைபெற்றது.
ஆனால் எவ்வித துப்பும் துலங்கவில்லை.

இது குறித்து மின்னம்பலத்தில்… ‘அவகாசம் கேட்கும் எஸ். பி. சிபிசிஐடி க்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு?’ என்ற தலைப்பில் மே 10 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் என மூன்று முக்கிய அதிகாரிகளும் இந்த வழக்கு பற்றி தினந்தோறும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டு வருகிறார்.

விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் போலீஸ் உயரதிகாரிகள் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம், ’சி.எம். இந்த வழக்கு பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விடலாமா?’  என்று ஆலோசித்திருக்கிறார்கள்.

அதற்கு எஸ்.பி. சிலம்பரசன், ‘எல்லா கோணங்களிலும் விசாரணை செஞ்சுக்கிட்டு இருக்கோம். வர்ற சன்டே வரைக்கும் டைம் கொடுங்க’ என்று பதில் சொல்லியிருக்கிறார்” என மே 10 வெள்ளிக்கிழமை மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக மே 13ஆம் தேதி திங்கள்கிழமை தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் இந்த வழக்கு தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி, எஸ் பி உள்ளிட்டவர்களுடன் நெல்லையில் சிறப்பு ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி கண்ணன், ‌ ஜெயக்குமார் மரணத்தை இன்னமும் சந்தேக மரணம் என்று கருதுவதாகவும் விசாரணை அனைத்து திசைகளிலும் தொடர்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஐஜி தெரிவித்து பத்து நாட்கள் ஆன நிலையிலும்  இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இன்று மே 23ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கண்மணி அன்போடு” : மஞ்சும்மல் பாய்ஸ்க்கு இளையராஜா செக்!

ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் மாஸ்டர்..! எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share