நெல்லை ஆட்சியர் அதிரடி : விவி மினரல்ஸ் கலக்கம்!

Published On:

| By Kumaresan M

சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த விவகாரத்தில் விவி மினரல்ஸ் நிறுவனம் ரூ. 2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவி மினரல்ஸ் நிறுவனம் 2002 ஆம் ஆண்டு முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுத்ததில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க, அப்போதைய செயலாளர் ககந்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மொத்தம் 15 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுக்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன. இந்த ஆய்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 2015 ஆம் ஆண்டு இது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்ட விரோதமாக கார்னைட், இல்மனைட், ருடெயில், சில்மினைட் உள்ளிட்ட தாது மணல் மற்றும் கனிமங்களை எடுத்த விவி மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிறுவனங்களில் விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ, 2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில்,ரூ. 2,146.36 கோடி தாது மணலுக்கு விலையாகவும் 48.82 கோடி ராயல்டியாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விவி மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் தாது மணலை எடுத்துள்ளதாகவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 88.4 லட்சம் மெட்ரிக் டன் தாது மணல் இந்த 3 மாவட்டங்களில் இருந்து அள்ளப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்ட நிலையில், திடீரென தற்போது மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share