நெல்லை – சென்னை ரயிலுடன் நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று (செப்டம்பர் 24) தொடங்கி வைத்தார்.
உள்நாட்டிலேயே உலகத்தரமான அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு, இதுவரை நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை சென்னை-கோவை வழித்தடத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
அதனை ஏற்று திருநெல்வேலி – சென்னை வழித்தடத்தில் செல்லும் வகையில் தமிழ்நாட்டின் 2வது வந்தேபாரத் ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று மதியம் தொடங்கி வைத்தார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நெல்லை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமையுடன், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் குழுமியிருந்து ரயிலை வழி அனுப்பி வைத்தார்கள்.
நெல்லை -சென்னை ரயிலுடன், விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு – ஐதராபாத், காசர்கோடு-திருவனந்தபுரம், பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத்ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவையொட்டி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிக்க ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து இருக்கைகளும் நிரம்பின.
மொத்தமுள்ள 8 பெட்டிகளில் 6 பெட்டிகளில் பயணிகளும், மீதம் உள்ள 2 பெட்டிகளில் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பயணம் செய்தனர்.
ரயில் பயணத்திற்கிடையே அதில் பயணித்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இனிப்பு வழங்கி பாராட்டியதோடு, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார்.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
திருநெல்வேலி சென்னை இடையேயான 660 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லக்கூடிய இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் மதியம் 2:50 சென்னை எழும்பூரில் புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது.
செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை – சென்னை பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலுக்கு கட்டணமாக 1665 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் கார் வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க 3025 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Connecting two vibrant Tamil Nadu cities
The Tirunelveli-Chennai Egmore Vande Bharat Express embarks on its journey as it departs from the iconic Madurai Junction towards Chennai
VC : Harish Babu J S #VandeBharat #SouthernRailway #Madurai pic.twitter.com/WEyr1qY4YG
— Southern Railway (@GMSRailway) September 24, 2023
வந்தே பாரத் ரயில் என்ன வசதிகள் உள்ளன?
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் 7 பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட சாதாரண இருக்கைகள் மற்றும் ஒரு பெட்டியில் எக்ஸிக்யூடிவ் அதி நவீன இருக்கைகள் என மொத்தமாக 540 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை – சென்னை இடையேயான தூரத்தை கடக்க எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 11 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயிலால் பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸை தவிர்த்து மற்ற ரயில்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக அதிவேகத்தில் செல்லும் வகையில் தற்போது வந்தே பாரத் ரயில் வந்துள்ளது.
“நெல்லையில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்துகளில் சென்றால் 11 மணி நேரம் பயணத்திற்கு ரூ. 1000 முதல் 1200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை- நெல்லை இடையேயான தூரம் 653 கிலோ மீட்டர். எனவே அதற்கு வந்தே பாரத் ரயிலில் இதே வழித்தடத்துக்கு ரூ. 1,600 கட்டணம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. 400 ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்தினால் போதும் இனி வரும் நாட்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 8 மணி நேரத்தில் சென்றடைய முடியும்,” என்றார்.
வைகை, பாண்டியன், நெல்லை போன்ற அதி விரைவு ரயில்கள் 110 கி.மீ வேகத்தை எட்ட 1.25 கிலோ மீட்டர் தூரம் தேவைப்படும். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில் 500 மீட்டரிலேயே 110 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் திறன் கொண்டது.
சென்னை- விருத்தாச்சலம் இடையே தற்போது நடைபெற்று வரும் ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தால் இந்த வந்தே பாரத் ரயில் வரும் காலங்களில் 7 மணி 30 நிமிடமாக பயண நேரம் குறையும்.
இந்த ரயிலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டி, மொபைல் சார்ஜிங் வசதி, நவீன கழிப்பறை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிப்பறை வசதி உள்ளிட்டவை இருக்கின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா