நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயிலுக்கான கட்டண விவரம் தெற்கு ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை இயக்கும் பணிகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை – நெல்லை உட்பட தென்னகத்தில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதன் சோதனை ஓட்டம் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை புறப்பட்டது வந்தே பாரத் ரயில்.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சியில் தலா 5 நிமிடங்கள் நின்று வந்த வந்தே பாரத் ரயில் எழும்பூருக்கு 1.30க்கு வந்தடைந்தது. அதுபோன்று பிற்பகல் 2.50க்கு சென்னையில் இருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயில் இரவு 10.30 மணிக்கு நெல்லையை அடையவுள்ளது.
சோதனை ஓட்டமாக இயக்கப்படும் ரயிலில் ரயில்வே கோட்ட மேலாளர் ப. அனந்த் மற்றும் ரயில்வே அதிகாரிகள், போட்டோகிராபர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர்.
இந்த ரயிலில் இன்ஜினுடன் சேர்த்து 8 பெட்டிகள் உள்ளன. இதில் ஒரு எக்ஸிக்யூடிவ் பெட்டி ஒன்று, சேர்கார் கொண்ட 7 பெட்டிகள் உள்ளன.
மொத்தம் 540 சீட்டுகள் உள்ளன. சேர்கார் பெட்டிகளில் தலா 78 இருக்கைகள் உள்ளன.
இதுதவிர சிசிடிவி கேமராக்கள். எல்.இ.டி டிவிக்கள், செல்போன் சார்ஜர் வசதி, ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ், பயணத்தின் போது பணியில் உள்ள அதிகாரிகளை அழைக்க டிஜிட்டல் மைக் வசதி, ட்ச் ஸ்க்ரீன் மின் விளக்கு வசதி, ஆபத்தான நேரத்தில் கண்ணாடியை உடைத்து வெளியேறுவதற்கான சாதனம்,
புகைப்பிடித்தால் உடனே எச்சரிக்கும் கருவி, இருக்கைகளை 180 டிகிரியில் திருப்பிக்கொள்ளும் வசதி என நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதன் கட்டணத்தை கேட்டால் தான் சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் தலை சுற்றுகிறது.
உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து, எக்ஸிக்யூடிவ் வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும், சேர்கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக ரூ.300, எக்சிகியூட்டிவ் பயணிகளுக்கு 375 ரூபாயும் வசூலிக்கப்படும். ரயில் டிக்கெட்டை புக் செய்யும் போதே பயணிகளுக்கு சைவ உணவா, அசைவ உணவா என்பதும் கேட்டு பதிவு செய்யப்படும். இந்த பயணித்தின் போது டீ அல்லது காபியுடன் உணவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
மூக்கு உடைந்தாலும் கோவையில் வந்து நிற்பேன் : கமல்
உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!