கேமராமேன் பலி: முதல்வர் நிவாரணம்!

Published On:

| By Jegadeesh

நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமராமேன் சங்கர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 24) நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சந்திராயன் 3 நிலவில் தரையிறங்குவது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழுவினர் நேற்று (ஆகஸ்ட் 23) மாலை ஒரு காரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லை நோக்கி திரும்பி வந்தனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி நான்குவழி சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது, கார் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமராமேன் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், நியூஸ் 7 தமிழ் கேமராமேன் வள்ளி நாயகம்,
மற்றொரு கேமராமேன் நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை விபத்தில் உயிரிழந்த சங்கரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்கள் 3 நபர்களுக்கு தலா ரூ.50,000-ம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சர்ப்ரைஸ்… இது மோடோரோலாவின் சர்ப்ரைஸ்!

“ஓமந்தூரார் மருத்துவனை தலைமை செயலகமாக மாற்றப்படாது” – மா.சுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel