நீட்- தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்: தலைவர்கள் வேண்டுகோள்!

Published On:

| By Jegadeesh

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாகவும், நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்து கொள்வது அதற்கு தீர்வாகாது என்றும்,

அது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது எனவும் அண்மையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிட்டது.

இந்த தேர்வில் தேல்வியடைந்ததால் சென்னை ஆவடியை சேர்ந்த மாணவி சுவேதா நேற்று (செப்டம்பர் 8)தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , நீட் தேர்வில் தோல்வி அடைந்த கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 9 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

”சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மன உளைச்சலில், கடந்த ஜூன் மாதம் தன்னால் முடியவில்லை என்று குரல் பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சோழபுரம் இந்திரா நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த அமுதா, ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

neet suicide political leaders advice

இவரது மகள் லக்சனா சுவேதா, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்தார். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்பை இணையத்தில் ஒன்றரை ஆண்டுகள் படித்து வந்தார்.

எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-ஆவது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் ”நான் தேர்வை சரியாக எழுதவில்லை.

மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது” என்று கூறியுள்ளார். நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஜெனி என்ற ஜெயசுதா, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வு திணிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப் போக்கி கொண்ட நிலையில் ,நேற்று மாணவி லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி தராமல் அலட்சியப் படுத்தி வருவதால். தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக உள்ளது.

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன.

அவற்றில் தேர்வு செய்து பயின்று. வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் , ”மாணவ , மாணவிகள் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

பெற்றோர்கள் அவர்களுக்கு மன தைரியத்தையம் , மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் , உற்சாகத்தையும் அளிக்க வேண்டும்.

தற்கொலை என்றும் பிரச்சனைக்கு தீர்வாகாது . வருங்காலங்களில் இதுபோல் முடிவை மாணவர்கள் எடுக்க கூடாது.

மாணவர்கள் மனம் தளராமல் , முயற்சியை மேற்கொண்டு வெற்றியடையக்கூடிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் .

தாங்கள் தீர்மானிக்கும் இலக்கை அடையும் வரை முயற்சியை என்றும் கைவிடக் கூடாது. விடா முயற்சியால் வெற்றியை நிச்சயம் அடைய முடியும்.

மாணவி சுவேதா அவர்களின் பெற்றோர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நீட் விலக்கு மட்டுமே தற்கொலையைத் தடுக்கும்: அன்புமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share