அனிதா முதல் ஜெகதீசன் வரை: தொடரும் நீட் தற்கொலைகள்!

Published On:

| By christopher

NEET Related Suicide Deaths in Tamil Nadu

மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட்  நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.

இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி 15 மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

எனினும் இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை.

இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் அதே வேளையில் தொடர்ந்து நடைபெறும் மாணவர்களின் உயிரிழப்பும் பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களை பற்றி இச்செய்தி குறிப்பில் காணலாம்.

 

செப்டம்பர் 1, 2017 : அனிதா

பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் எடுத்திருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 196.5 கட் ஆப் மார்க்கும் பெற்றிருந்தார்.

பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்ற அவரால், கட்டாய நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.­ நீட் தேர்வில் அவரால், 720க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தனது மருத்துவராகும் கனவு தகர்ந்தநிலையில், அனிதா 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய அனிதாவின் தற்கொலை நீட் தேர்வின் முதல் மரணம். அதுமுதல், தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்ற குரல்களும், போராட்டங்களும் தொடர்ந்து தீவிரமாக ஒலிக்கத் தொடங்கின.

ஜூன் 5, 2018: பிரதீபா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்தவர் பிரதீபா. 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர்.

முதல் முறை எழுதிய நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் போதிய பணம் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை.

இந்நிலையில் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் மனமுடைந்த பிரதீபா எலி மருந்தை  குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செப்டம்பர் 7, 2018: ஏஞ்சலின் ஸ்ருதி

சென்னை சேலையூரை சேர்ந்த ஏஞ்சலின் ஸ்ருதி என்ற மாணவி. சிபிஎஸ்சி பள்ளியில் படித்த இவர், நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காத சோகத்தில்  தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜூன் 5, 2019: ரித்துஸ்ரீ

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வசிக்கும் செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியரின் மகள் ரித்துஸ்ரீ , நீட்  தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

ரித்து ஸ்ரீயின் பெற்றோர் திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள்.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த அவர், பொருளாதார வசதியின்மை காரணமாக தனியார் நீட் பயிற்சி வகுப்புகள் ஏதும் செல்ல இயலாததால் பள்ளியிலேயே இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் படித்து நீட் தேர்வை எழுதியவர்.

ஜூன் 6, 2018 : வைசியா (17)

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன் நகர் நம்பிராஜன் மீன் வியாபாரி. இவரது மகள் வைசியா(17) தான் டாக்டராக வேண்டும் என்று கனவுகொண்டவர். பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் படித்தவர், மருத்துவக் கனவோடு நீட் தேர்வு எழுதினார்.

நீட் தேர்வு முடிவில் வைசியாவுக்கு குறைந்த மதிப்பெண்களே கிடைத்ததால் மருத்துவ இடம் கிடைக்காது என்று கருதினார் வைசியா.

தனது பல ஆண்டுக் கனவு பொசுங்கிப் போனதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னையே பொசுக்கிக் கொள்ள முடிவெடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீவைத்து தற்கொலை செய்துக்கொண்டார்.

ஜூன் 7, 2018: சுபஸ்ரீ(17)

திருச்சி அருகே திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன்-செல்வி தம்பதியர். இவர்களது மூத்த மகள் சுபஸ்ரீ(17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்த அவர் பொதுத்தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்பதை உணர்ந்திருந்த சுபஸ்ரீ பிளஸ்-2 தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.

அப்போது வெளியான நீட் தேர்வு முடிவில் மாணவி சுபஸ்ரீ 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் தனது டாக்டர் கனவு தகர்ந்ததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டின் தனியறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜூன் 6, 2019: மோனிஷா(18)

மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பத்தை சேர்ந்தவர் மீனவர் மோகன்.  இவருக்கு 3 மகள்கள். மூத்த மகள் மோனிஷா(18). இவர் 2017-18 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.  பின்னர் டாக்டராக வேண்டும் என்ற ஆசையால் ஓராண்டாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

அதன்படி 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய இவர், தகுதி பெறாததால் தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 15, 2019: பாரதபிரியன்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நீட் தேர்வில் தோல்வியடைந்து, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

ஆகஸ்ட் 2, 2019: தனலட்சுமி(18)

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மகள் தனலட்சுமி (18).  பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இதனால்  கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய கடிதத்தில், “நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் வெற்றி பெற்று டாக்டராகி இருந்தால் எனது மதிப்பு வேறு மாதிரி ஆகி இருக்கும். இப்போது வீட்டில் அடைப்பட்டு கிடக்கிறேன். என் தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 18, 2020: சுபஸ்ரீ (19)

கோவை ஆர்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் சுபஸ்ரீ. நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு படித்தார். இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

முதன் முறை எழுதிய நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவ பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. அப்போது ஏற்பட்ட நீட் தேர்வு பற்றிய பயம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்துள்ளதுள்ளார்.

செப்டம்பர் 10, 2020: விக்னேஷ்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் விக்னேஷ். இவர்  2017ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் கேரளாவிலும், துறையூரில் ஒரு நிறுவனத்திலும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைக்கவில்லை. தொடர்ந்து 3வது முறையும் நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார்.

அந்த வருடம் செப்டம்பர் 13ஆம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில், இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் தேர்வுக்கு 3 நாள் முன்னதாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

செப்டம்பர் 12, 2020: ஜோதி ஸ்ரீ துர்கா (19)

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் முருகசுந்தரம். அப்பகுதியில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவரது  மகள் ஜோதி ஸ்ரீ துர்கா (19) . 2019 ஆண்டு தேர்வு எழுதியபோது தேர்ச்சி பெறவில்லை. அதனைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தேர்வுக்காக அதிக சிரத்தையுடன் படித்தார்.

இந்த ஆண்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால்… தேர்ச்சி பெற்று மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்று தேர்வுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஜோதி துர்கா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செப்டம்பர்  12, 2020: ஆதித்யா(வயது 20)

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை அடுத்த செவத்தான்கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். டிராக்டர் விற்பனை வியாபாரம் செய்து வருகிறார். இவரது ஒரே மகன் ஆதித்யா.  கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்றார்..

மருத்துவம் படிப்பதே இவருடைய விருப்பமாக இருந்தது. நீட் மருத்துவ நுழைவு தேர்வுக்காக சுமார் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில்,  தேர்வுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட அச்சத்தில் வீட்டில் யாருமில்லாத நிலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செப்டம்பர் 12, 2020: மோதிலால் (21)

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இடையான்பரப்பு பகுதியைச் சேர்ந்த எலட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன். இவரது மகன் மோதிலால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

மூன்றாவது முறையாக  நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், தேர்வுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட அச்சம் காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செப்டம்பர் 9, 2021: தனுஷ்

சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார்.

மூன்றாவது முறையாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்தமுறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

செப்டம்பர் 14, 2021:  கனிமொழி (17)

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கனிமொழி நாமக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படித்து,  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

அந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் இருந்து மகளை தந்தை தேற்றியுள்ளார். எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தேர்வு எழுதிய மறுநாளே வீட்டில் தனியாக இருந்த கனிமொழி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செப்டம்பர் 15, 2021:  செளந்தர்யா (17)

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு – ருக்மணி தம்பதியரின் நான்காவது மகள் செளந்தர்யா.  பெற்றோர் இருவருமே கூலி தொழிலாளிகள். தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த இவர் பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர்.

அந்தாண்டு நீட் தேர்வு எழுதியவர், 3 நாட்களுக்கு பிறகு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோம் என்ற அச்சத்தினால்  அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அக்டோபர் 30, 2021: கீர்த்திவாசன் (21)

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முத்தூர் குப்பையன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவருடைய மூத்தமகன் கீர்த்திவாசன் (21) பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காகக 3 முறை நீட் தேர்வை எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.

4-வது முறையாகத் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார். ஆனால் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் தேர்ச்சி பெறமாட்டோமோ என்ற அச்சத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்திவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஜூலை 7, 2022: முரளி கிருஷ்ணா (18)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்தவர் கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் முரளி கிருஷ்ணா,   நீட் நுழைவுத்தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் 2022ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத அவர் தயாராகி வந்தார்.

2022  ஜூலை 17ஆம் தேதி நடைபெற இருந்த  நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் 10 நாட்களுக்கு முன்னதாக வந்தது. இதைப் பார்த்த முரளி கிருஷ்ணா, இந்த முறையும் தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

ஜூலை 16, 2022: நிஷாந்தி (18)

அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நிஷாந்தி. தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற இந்த மாணவி 430 மதிப்பெண்களை பெற்று தனது சிறுவயது கனவான டாக்டராக விரும்பி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்.

பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இந்த மாணவி முந்தைய ஆண்டு நீட் தேர்வில் 220 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

தொடர்ந்து 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிஷாந்தி, தேர்வுக்கு முந்தைய நாளில் எழுந்த அச்சத்தின் காரணமாக  வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செப்டம்பர் 8, 2022: லக்ஷனா ஸ்வேதா

சென்னை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா மருத்துவக் கனவோடு நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்வத்தோடு அதை பார்த்தபோது ஸ்வேதா தேர்வில் தோல்வியடைந்திருந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில்   வீட்டிலேயே தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நவம்பர் 13, 2022: மனோநாராயணன்(20)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் லெனின் சங்கர், கூலி தொழிலாளி. இவருடைய மகன் மனோநாராயணன்(வயது 20). இவர் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என்பதால் 2-வது முறை தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்துள்ளார்.

பயிற்சி மையத்தில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து காணப்பட்ட மனோ நாராயணன் தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 27, 2023 சந்துரு (19)

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் சேலம் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்..

ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதிய சந்துரு, மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், திடீரென விடுதியின் அறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் 5, 2023: நிஷா

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளியான உத்திராபதியின் மகள் நிஷா, முதல்முறை நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றும், மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன், நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். முதல் தடவை நீட் எழுதி தோல்வியடைந்த நிலையில், 2வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார்.

தேர்வுக்கு முன்னதாக பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்த நிஷா, வடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

NEET Related Suicide Deaths in Tamil Nadu

மே 7, 2023: ஹேமசந்திரன் (18)

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபியாக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது மகன் ஹேமச்சந்திரன் பிளஸ்-2 முடித்து விட்டு, மருத்துவ கல்லூரியில் சேரும் ஆசையில் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இரு முறையும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார்.  3-வது முறையாக ‘நீட்’ தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் தேர்வு நடைபெற இருந்த அதே நாளில் (மே 7), எங்கே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NEET Related Suicide Deaths in Tamil Nadu

மே 16, 2023 : பரமேஸ்வரன் (17)

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். இந்தாண்டு மே 7ஆம் தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று மனமுடைந்து காணப்பட்ட பரமேஸ்வரன், தேர்வு நடைபெற்ற 10 நாட்களுக்கு பிறகு வீட்டின் அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NEET Related Suicide Deaths in Tamil Nadu

ஆகஸ்ட் 13, 2023: ஜெகதீஸ்வரன்(19)

சென்னை, குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் செல்வம். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.இ. பிளஸ்2 வகுப்பில் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் அவரால் சீட் பெற முடியவில்லை.

மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என்ற நம்பிக்கையோடு இருந்த அவர், நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.

இதற்கிடையே, நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும், அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். சிலர் தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே நேரத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த தந்தை செல்வம் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ்நாட்டில் நீட் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆறு ஆண்டுகளில் இதுவரை ஏறத்தாழ 30 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பொதுவாக நீட் தேர்வு காலங்களில் ஏற்படுகிற அச்சம், பெற்றோருக்கு ஏற்படும் சிரமம், அடுத்தடுத்த தோல்வியால் ஏற்படும் அவமானம் ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வதை பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் இத்தனை மரணங்களா என்று கேட்டால்,

ராஜஸ்தான் மாநிலம் போட்டி தேர்வுக்கு என்றே உருவாகியுள்ள கோட்டா நகரம் மாணவர்களின் தற்கொலை நகரமாகவே மாறி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் இருக்கின்றன. இங்கு ஐஐடி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் இந்தியா முழுவதுமிருந்து வந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர்.

இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக, கடந்த சில காலமாகவே குற்றம்சாட்டப்படுகிறது.  மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால், அங்கு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

நீட் அமலுக்கு வந்த 2016-ம் ஆண்டில் மட்டும் கோட்டாவில் 17 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். 2017-ம் ஆண்டு 7 பேரும், 2018-ம் ஆண்டில் 18 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதே போன்று கடந்த ஆண்டில் 15 மாணவர்களும், இந்த ஆண்டில் இதுவரை 15 மாணவர்களும் கோச்சிங் நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளனர்.

இப்படி நாடு முழுவதும் நீட் தேர்வும், அதற்கு பயிற்சியளிக்கும் கோச்சிங் செண்டர்களும் மாணவர்களின் உயிர்களை கொத்து கொத்தாக பலிவாங்கிக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டி.ஆர் பாரிவேந்தர் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர்  நீட் பயிற்சி மையங்களில் நிகழ்ந்த மாணவர் தற்கொலைகள் பற்றிய தரவு குறித்து செய்தி எழுப்பினர்.

அதற்கு கடந்த மாதம் ஜூலை 24 அன்று பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார்,  நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பயிற்சி மையங்களின் மாணவர்களின் தற்கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தரவுகள் பராமரிக்கப்படவில்லை” என்று  கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்கால செல்வங்களான மாணவர்களின் உயிரின் மதிப்பை உணர்ந்து நீட் தேர்வினை திரும்ப பெற வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கொலை முயற்சி வழக்கில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது!

10 ஆயிரம் மின்சார பேருந்துகள்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share